வெனிசுலா: 6 அமெரிக்கர்கள் விடுதலை!

அமெரிக்க அதிபர் டிரம்பின் தூதர் வெனிசுலா அதிபர் மதுரோவை சந்தித்து பேசிய பின்னர் அந்நாட்டில் சிறைப் பிடிக்கப்பட்டிருந்த 6 அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெனிசுலாவிலுள்ள அமெரிக்க பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியிருந்தது. மேலும், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் வெனிசுலா குற்றவாளிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், அதிபர் டிரம்பின் தூதர் ரிச்சார்டு க்ரெனெல் வெனிசுலா தலைநகர் கர்கஸில் அதிபர் நிகோலஸ் மதுரோவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இது மரியாதைக்குரிய சந்திப்பாக அமைந்ததாக வெனிசுலா நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, அதிபர் டிரம்பின் தூதர் ரிச்சார்டு க்ரெனெல் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் விடுவிக்கப்பட்ட 6 அமெரிக்க பிணைக் கைதிகளுடன் விமானத்தில் நாடு திரும்பும் புகைப்படத்தை இன்று (பிப்.1) வெளியிட்டுள்ளார்.
ஆனால், வெனிசுலா சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் நீல நிற உடையில் காட்சியளித்த 6 அமெரிக்கர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், 6 பேர் நாடு திரும்பியதற்கு அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஜன.31 அன்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் இந்த சந்திப்பினால் அதிபர் மதுரோவை அமெரிக்க அங்கீகரித்ததாக அர்த்தமில்லை எனக் கூறப்பட்டுள்ளது.