கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு புதிய வரி: டிரம்ப் அதிரடி!

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய வரிகளை அறிவித்துள்ளார்.
அதன்படி, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஆற்றல் துறை சார்ந்த இறக்குமதிகளுக்கு 10% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டு வருகிறார். சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து வரி விதிப்பையும் அமலுக்கு கொண்டுவந்துள்ளார்.
வரிவிதிப்பு குறித்து அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதிகளுக்கு 25% வரி விதிப்பது இன்றுமுதல் அமல்படுத்தப்படுகிறது. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அவசரநிலை பொருளாதார அதிகாரச் சட்டத்தின்படி இந்த வரிகள் அமல்படுத்தப்படுகிறது. ஏனெனில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அமெரிக்க குடிமக்களை பெரிதும் பாதிக்கிறது.
அமெரிக்கர்களை பாதுகாக்க வேண்டும். குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அதிபராக என்னுடைய கடமை. எனது பிரசாரத்தின்போது சட்டவிரோத குடியேற்றத்தையும், போதைப்பொருள் உள்நுழைவதையும் எல்லைகளில் முற்றிலும் தடுப்பேன் என வாக்குறுதி அளித்திருந்தேன். அதற்காகவே அமெரிக்கர்கள் என்னைத் தேர்வு செய்துள்ளனர் எனப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமான குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தேசிய அவசரநிலை முடிவுக்கு வரும் வரை புதிய வரிகள் அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.