;
Athirady Tamil News

சுதந்திர பாலஸ்தீனம் உருவானால்தான் தூதரக உறவு: செளதி அரேபியா!

0

சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்கிய பிறகே இஸ்ரேலுடன் தூதரக ரீதியிலான உறவை மேற்கொள்வோம் என்று செளதி அரேபியா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கிடையே வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், காஸாவை கைப்பற்றி அமெரிக்க ராணுவத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார்.

மேலும், காஸா முனையில் உள்ள பாலஸ்தீனியர்கள் எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவர் என்றும் தெரிவித்தார்.

டிரம்பின் அறிவிப்பை எதிர்த்து, செளதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது:

“பாலஸ்தீனத்தில் சுதந்திரமான அரசை ஏற்படுத்துவதில் செளதி அரேபியாவின் நிலைப்பாடு உறுதியானது, அதனை யாரும் மாற்ற முடியாது என்பதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஷூரா கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவை எங்களின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் செளத் தெளிவாக தெரிவித்திருந்தார்.

கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு சுதந்திர பாலஸ்தீன நாட்டை உருவாக்க செளதி அரேபியா தனது இடைவிடாத முயற்சிகளை தொடரும். இதனை ஏற்படுத்தாமல் இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை செளதி அரேபியா ஏற்படுத்தாது.

இஸ்ரேலிய குடியேற்றக் கொள்கைகள் மூலம் நில இணைப்பு அல்லது பாலஸ்தீன மக்களை அவர்களின் நாட்டுக்குள் இடம்பெயரச் செய்வதை செளதி அரேபியா நிராகரிப்பதை மீண்டும் உறுதிபடுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.