;
Athirady Tamil News

காங்கோவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை; எரித்துக் கொலை!

0

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அதன் அண்டை நாடான ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்களால் உள்நாட்டில் கலவரம் மூண்டுள்ளது.

தாது வளம் நிறைந்த காங்கோவில் செயல்படும் நூற்றுக்கணக்கான கிளா்ச்சிக் குழுக்களில் எம்23-யும் ஒன்று. எம்23 படையின் முன்னேற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அந்நாட்டின் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

இதனிடையே, காங்கோவின் முக்கியத்துவம் வாய்ந்த கோமா நகருக்குள், எம்23 கிளா்ச்சிப் படையினா் கடந்த வாரம் நுழைந்துவிட்ட நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கு நிலவும் அசாதாரண சூழலை பயன்படுத்தி பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கோவில் சுமார் 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட கோமா நகரைக் கைப்பற்றியுள்ள கிளர்ச்சிப்படையினர், பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறைகளை தங்கள் போர் ஆயுதமாக பயன்படுத்துவதாக ஐ. நா. மனித உரிமைகள் உயர் ஆணையரகம் கவலை தெரிவித்துள்ளது.

கோமா நகரில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியடையச் செய்துள்ளன. மேலும், பல பெண்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோமா நகரிலுள்ள ‘மன்ஸென்ஸே’ சிறைச்சாலையில் கடந்த மாதம் ஜன. 27-ஆம் தேதி பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த அசாதாரண சூழலைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஆண் கைதிகள் சிறையிலிருந்து தப்பித்து வெளியேறியிருப்பதாகவும், இதனிடையே பெண் கைதிகள் நூற்றுக்கணக்கானோர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சிறை வளாகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதில் ஏராளமான பெண்கள் உடல் கருகி உயிரிழந்திருப்பதாகவும், காங்கோவில் அமைதியை நிலைநாட்ட சென்றிருக்கும் ஐ. நா. அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் துணைத் தலைவர் விவியன் வேண் டே பெர்ரே தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை(பிப். 4) நிலவரப்படி, சிறைச்சாலை வளாகப் பகுதியில் சுமார் 2,000 உடல்கள் அடக்கம் செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ’ஜனநாயகக் குடியரசு காங்கோ’ நாட்டின் ராணுவம் திடீரென போர்நிறுத்தத்துக்கு சம்மதித்திருப்பதுடன், உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாகக் கடந்த திங்கள்கிழமை இரவு தெரிவித்துவிட்ட நிலையில், அதன் அண்டை நாடான ருவாண்டா, காங்கோவின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனையடுத்து இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிடுமாறு ருவாண்டோ அரசுக்கு ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் அழுத்தம் கொடுக்கவும், ஐ. நா. அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் துணைத் தலைவர் விவியன் வேண் டே பெர்ரே வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எம்23 கிளர்ச்சிப்படையின் முக்கிய தலைவர்களுடன் தங்கள் குழு தொடர்ந்து பேச்சு நடத்தி வருதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.