;
Athirady Tamil News

தில்லி பேரவை தேர்தல்: அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் வாக்களிப்பு

0

தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மத்திய அமைச்சர்கள் எஸ். ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் புரி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தில்லி முதல்வர் அதிஷி, முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா ஆகியோர் வாக்களித்தனர்.

தில்லி தேர்தலில் குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு புதன்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்திற்குள் உள்ள ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து காலை 9 மணியளவில் வாக்களித்தார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், “வாக்குப்பதிவு தொடங்கியதும் நான் எப்போதும் முதல் வாக்காளராக வாக்களிப்பேன். மக்கள் மாற்றத்தின் மனநிலையில் உள்ளனர்’ என்று கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், தனது பெற்றோரை சக்கர நாற்காலியில் அழைத்து வந்து வாக்களித்தார்.

சிறந்த பள்ளிகள், மருத்துவமனைகள், நகரத்தின் வளர்ச்சிக்காக வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு தில்லி மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தூய்மையான அரசியல் என்று கூறி தில்லியில் மிகப்பெரிய ஊழலைச் செய்தது யார் என்பதை வாக்காளர்கள் நினைவில் கொள்ளுமாறு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

முதல்முறையாக வாக்களித்த பாகிஸ்தான் ஹிந்து அகதிகள்

தில்லியில் உள்ள பாகிஸ்தான் ஹிந்து அகதிகள் முதல் முறையாக இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். பாகிஸ்தானில் நிலவிய மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். அவர்களில் பலர் தில்லி மஞ்னு கா திலாவில் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து தங்கியுள்ளனர்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மை மதத்தினர், உரிய ஆவணங்களின்றி கடந்த 2014, டிச.31-ஆம் தேதிக்குள் இந்தியாவில் குடியேறி இருந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விதமாக குடியுரிமை சட்டத்தில் கடந்த 2019-இல் மத்திய அரசு திருத்தம் செய்தது.

இந்த விதிகள் கடந்த ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி அமலுக்கு வந்தன. இதையடுத்து, பாகிஸ்தான் ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற தில்லி பேரவைத் தேர்தலில் மஞ்னு கா திலாவில் உள்ள வாக்குச் சாவடியில் 186 பாகிஸ்தான் ஹிந்துகள் வரிசையில் காத்திருந்து முதல் முறையாக தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

முதல் முறையாக வாக்களித்த சந்திரமா கூறுகையில், “இங்கு கடந்த 17 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். ஆனால், முதல் முறையாக எனது வாக்கை இப்போது செலுத்தினேன். இந்தியாவின் அங்கமாக இருப்பதை உணர்கிறேன். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, என்னுடைய குழந்தைகள் சிறப்பான வாழ்வைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது’ என்றார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.