மணமகனின் சிபில் ஸ்கோர் குறைந்ததால் திருமணம் நிறுத்தம்

புதுடெல்லி: பொதுவாக வரண் தேடும்போது ஜாதக பொருத்தம், குடும்ப பின்னணி உள்ளிட்டவற்றை அலசி ஆராய்வது வழக்கம். ஆனால், இப்போது கடன் பின்னணியையும் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் முர்திசாபூரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். பல்வேறு அம்சங்களில் இருவீட்டாரும் திருப்தி அடைந்த நிலையில் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், மணப்பெண்ணின் தாய் மாமன், மணமகனின் சிபில் மதிப்பெண்ணை சரிபார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதன்படி, சிபில் மதிப்பெண்ணைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கிய அவர் முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என்பது தெரியவந்தது.
“ஏற்கெனவே கடனில் மூழ்கியவருக்கு எப்படி எங்கள் பெண்ணை தர முடியும்” என தாய்மாமன் கேள்வி எழுப்பி உள்ளார். இவரது கருத்துக்கு மணமகள் வீட்டார் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, தங்கள் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, திருமணப் பேச்சுவாத்தையை மணமகள் வீட்டார் நிறுத்திக் கொண்டனர்.
இனி, சிபில் மதிப்பெண் குறைவாக இருந்தால் வங்கிகள் மட்டும் உங்களை நிராகரிக்காது, மணப்பெண் வீட்டாரும் நிராகரித்து விடுவார்கள். மணமகனுக்கான தகுதி பட்டியலில், ஜாதகம், குடும்பப் பின்னணி, நிரந்தர வேலை உள்ளிட்டவற்றின் வரிசையில், சிபில் மதிப்பெண்ணும் இடம்பெற்றுவிட்டது.