தீவிர வலதுசாரி தலைவர்களின் உச்சிமாநாடு… ஜனாதிபதி ட்ரம்புக்கு புகழாரம்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய வாக்களிப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ள தீவிர வலதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட உச்சிமாநாட்டில் ஜனாதிபதி ட்ரம்பை புகழ்ந்துள்ளனர்.
ட்ரம்ப் சூறாவளி
ஐரோப்பாவிற்கான தேசபக்தர்கள் என்ற கூட்டமைப்பானது டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்ததைப் பாராட்டியுள்ளது. ஐரோப்பாவை மீண்டும் சிறந்ததாக்குங்கள் என்ற முழக்கத்துடன் மாட்ரிட் நகரில் ஒன்று கூடியுள்ளனர்.
இந்த உச்சிமாநாட்டில் ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் மற்றும் இத்தாலிய துணை பிரதமர் மேட்டியோ சால்வினி, பிரான்சின் RN கட்சி தலைவர் லீ பென், நெதர்லாந்தின் PVV கட்சி தலைவர் Geert Wilders ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
சுமார் 2000 ஆதரவாளர்கள் திரண்டிருந்த சபையில் உரையாற்றிய ஓர்பன், ட்ரம்ப் சூறாவளி ஒரு சில வாரங்களில் உலகையே மாற்றிவிட்டது என்றார். நேற்று வரையில் நாம் மதவெறியர்களாக இருந்தோம், இன்று நமக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
புலம்பெயர் கொள்கை
உரையாற்றிய அனைத்து தலைவர்களும் புலம்பெயர் கொள்கைகளுக்கு எதிராகவே கருத்து தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, ஐரோப்பிய ஆணையத்தின் உர்சுலா (Ursula von der Leyen) மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டபோது கூட்டத்தினர் ஏளனக்குரல்களை எழுப்பினர்.
ஐரோப்பாவிற்கான தேசபக்தர்கள் என்ற கூட்டமைப்பானது மே 2024ல் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் தற்போது 14 நாடுகளைச் சேர்ந்த 86 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.