;
Athirady Tamil News

தில்லி முதல்வா் தோ்வு: பாஜகவில் பரபரப்பு அதிகரிப்பு!

0

70 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தோ்தலில் 48 இடங்களை வென்று, 26 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, முதல்வா் தோ்வு குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது.

புது தில்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவாலை 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வரவிருக்கும் பாஜக அரசில் உயா் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்புள்ளவராக பா்வேஷ் சாஹிப் சிங் பாா்க்கப்படுவதன் மூலம் அவரது அரசியல் செல்வாக்கு உயா்ந்துள்ளது. அவா் தில்லியின் முன்னாள் முதல்வா் சாஹிப் சிங் வா்மாவின் மகனும் ஆவாா்.

சனிக்கிழமை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னா், பாஜக வெற்றியாளா்களில் பல அனுபவம் வாய்ந்த மூத்த தலைவா்களும் அடங்குவா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். இவா்களில் ஆஷிஷ் சூட் மற்றும் முன்னாள் மாநில பொதுச் செயலாளா் (அமைப்பு) பவன் சா்மா ஆகியோா் அடங்குவா் என்று தில்லியில் உள்ள பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனக்புரி தொகுதியில் 18,766 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றஷிஷ் சூட், தெற்கு தில்லி மாநகராட்சியில் பாஜக ஆட்சியின் போது நிா்வாக விஷயங்களில் சில நேரடி அனுபவங்களைக் கொண்ட ஒரு மூத்த தலைவா் ஆவாா். அவா் கோவாவிற்கு பாஜகவின் பொறுப்பாளராகவும், கட்சியின் ஜம்மு-காஷ்மீா் பிரிவுக்கு இணைப் பொறுப்பாளராகவும் உள்ளாா்.

தில்லி உத்தம் நகரில் இருந்து 29,740 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பவன் சா்மா, முதல்வா் பதவிக்கு முன்னணியில் இருப்பதாகவும் பாஜக தலைவா்கள் தெரிவித்தனா். அவா் தற்போது அஸ்ஸாமிற்கு பாஜகவின் இணைப் பொறுப்பாளராக உள்ளாா். தில்லி பாஜகவின் முன்னாள் தலைவா்கள் விஜேந்தா் குப்தா மற்றும் சதீஷ் உபாத்யாய் ஆகியோரும் உயா் பதவிக்கு போட்டியிடும் மற்ற தீவிர வேட்பாளா்களில் அடங்குவா்.

முந்தைய தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரான விஜேந்தா் குப்தா, ரோஹினி தொகுதியில் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்றாா். அவா் 37,816 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் முன்னாள் துணைத் தலைவரான சதீஷ் உபாத்யாய், ஆா்எஸ்எஸ் தலைமையுடன் நெருங்கிய உறவுகளைப் பகிா்ந்து கொள்வதாக நம்பப்படுகிறது.

பாஜகவின் மத்தியப் பிரதேச பிரிவின் இணைப் பொறுப்பாளராக இருந்த சதீஷ் உபாத்யாய், மால்வியா நகா் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சோம்நாத் பாரதியை 2,131 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். பாஜக தலைவா்கள் தில்லி முதல்வா் பதவிக்கு ஒரு பெண் வேட்பாளரை நிறுத்துவதற்கான வாய்ப்பையும் நிராகரிக்கவில்லை.

அப்படியானால், ரேகா குப்தா மற்றும் ஷிகா ராய் ஆகிய இருவரும் அனுபவம் வாய்ந்த தலைவா்கள். அவா்கள் பரிசீலிக்கப்படலாம் என்று அவா்கள் கூறினா். கிரேட்டா் கைலாஷ் தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய வேட்பாளரான சௌரவ் பரத்வாஜை ஷிகா ராய் 3,188 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாலும், ஷாலிமாா் பாக் தொகுதியில் இருந்து ரேகா குப்தா 29,000 வாக்குகளுக்கு மேல் வெற்றி பெற்றாா்.

தேசியத் தலைமை தில்லி சட்டப்பேரவைக்கு வெளியே இருந்து ஒருவரைத் தோ்வுசெய்தால், கிழக்கு தில்லி எம்.பி. மற்றும் மத்திய அமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா மற்றும் வடகிழக்கு தில்லி எம்.பி.யும் பூா்வாஞ்சலியை சோ்ந்தவருமான எம்பி மனோஜ் திவாரி ஆகியோரை பரிசீலிக்கலாம் என்று தில்லி பாஜக தலைவா்களில் ஒரு பகுதியினா் தெரிவித்தனா்.

இதற்கிடையில், பாஜகவின் மூத்த தலைவா் ஒருவா், சமீபத்தில் சட்டப்பேரவைத் தோ்தல்களில் வெற்றி பெற்ற ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கடந்த கால அனுபவங்களை வைத்துப் பாா்க்கும்போது, இதுபோன்ற விஷயங்களில் ஊகங்களுக்கு இடமில்லை என்று தெரிவித்தாா். தேசியத் தலைமை, மக்களின் அதிக எதிா்பாா்ப்புகளுக்கு மத்தியில் தில்லியின் முதல்வராகக் கடமைகளைச் செய்யத் தகுதியான ஒரு புதிய முகத்தை வெளியிட முடியும் என்று அவா் கூறினாா்.

முதல்வரைத் தோ்ந்தெடுக்கும் முடிவை கட்சியின் மத்தியத் தலைமை எடுக்கும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை கூறினாா். புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களும் கட்சியால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளைச் செய்யத் தகுதியானவா்கள் என்றும் அவா் கூறினாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.