;
Athirady Tamil News

தையிட்டியில் நாளை போராட்டம் – பல்வேறு தரப்பும் ஆதரவு

0

யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள, அதனை சூழவுள்ள தமது காணிகளை மீள கையளிக்க கோரி காணி உரிமையாளர்கள் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை மறுதினம் புதன் கிழமை ஆகிய இரு நாட்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தையிட்டி பகுதியில் உள்ள சுமார் 07 ஏக்கர் காணியை அடாத்தாக கையகப்படுத்தி , எவ்வித அனுமதிகளும் இன்றி சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை எனும் விகாரை கட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இருந்த மக்கள் யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு கால பகுதியில் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். பின்னர் அப்பகுதியை உயர்பாதுகாப்பு வலயமாக இராணுத்தினர் பிரகடனப்படுத்தியிருந்தனர்.

பின்னர் யுத்தம் நிறைவடைந்த நிலையில் மக்கள் மீள்குடியேற இராணுவத்தினர் கட்டம் கட்டமாக அனுமதித்தனர். அவ்வேளை தற்போது விகாரை அமைந்துள்ள மற்றும் அதனை சூழவுள்ள சுமார் 14 ஏக்கர் காணியில் மக்கள் மீள் குடியேற இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

குறித்த பகுதியில் எவ்வித அனுமதிகளும் இன்றி, யாழ் மாவட்ட மற்றும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் விகாரையின் கட்டுமான பணிகளை நிறுத்தி , அப்பகுதிகளை மக்களிடம் மீள ஒப்படைக்குமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், காணிகள் மீள கையளிக்கப்படாது, இராணுவத்தினரின் உதவியுடன் விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள காணிகளான 14 ஏக்கர் காணியையும் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும் என காணி உரிமையாளர்கள் சுமார் ஒரு வருட காலத்திற்கு மேலாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை மறுதினம் புதன்கிழமை ஆகிய இரு நாட்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து போராடத்தில் ஈடுபட வேண்டும் என காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணி உரிமையாளர்களின் கோரிக்கையை அடுத்து , பல்வேறு தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள சுமார் 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு வழங்க வேண்டும் எனவும், அதில் யாத்திரிகள் தங்குமிடம், மடாலயங்கள் , பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் என்ற அமைப்பு யாழ். மாவட்ட செயலரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளது.

குறித்த அமைப்பின் தலைவர் தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் எனவும், பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி இருந்தவர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.