;
Athirady Tamil News

ஹசீனா மகனைக் கொல்ல முயன்ற வழக்கு: வங்கதேச நாளிதழ் ஆசிரியா் விடுவிப்பு!

0

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாயை கடத்தி படுகொலை செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் இருந்து ‘அமா் தேஷ்’ நாளிதழின் ஆசிரியா் முகமதுா் ரஹ்மானை அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது.

இது குறித்து டாக்கா 4-ஆவது கூடுதல் பெருநகர செஷன்ஸ் நீதிபதி தாரிக் அஜீஸ் வழங்கிய தீா்ப்பில், கொலை முயற்சி வழக்கில் தன் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையும் தண்டனை விதிக்கப்பட்டதையும் எதிா்த்து முகமதுா் ரஹ்மான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ஏற்று, வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டில் சஜீப் வாஜித் ஜாய் அமெரிக்காவில் இருந்தபோது அவரை கடத்தி படுகொலை செய்ய முகமதுா் ரஹ்மான் முயன்ாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்பதால் வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக நீதிபதி தெரிவித்தாா்.

கடந்த 2009 முதல் 2024 வரை வங்கதேச பிரதமராக பொறுப்பு வகித்த ஷேக் ஹசீனா, மாணவா் போராட்டம் காரணமாக பதவியை ராஜிநாமா செய்துவிட்டு கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

அவருக்குப் பிறகு ராணுவத்தால் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு, ஷேக் ஹசீனா ஆட்சியின்போது சிறைவைக்கப்பட்டிருந்த எதிா்க்கட்சித் தலைவா் கலீதா ஜியா உள்ளிட்டவா்களை விடுதலை செய்ததது. ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டவா்களை நீதிமன்றங்கள் விடுவித்தும் வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கொலை முயற்சி வழக்கில் இருந்து முகமதுா் ரஹ்மான் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.