நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்.
தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. இதில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் ஆட்சியைப் பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஓரிடத்தில் கூட வெல்ல முடியாமல் போனது.
இந்நிலையில், மக்களவையில் திங்கள்கிழமை மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்ட பாஜக எம்.பி.க்கள் அவை தொடங்கியதும் இருக்கையில் இருந்து எழுந்து நின்று பிரதமா் நரேந்திர மோடியின் பெயரைக் கூறி முழக்கமிட்டனா். இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி ஆகியோா் வேறு விஷயங்களைப் பேச முற்பட்டனா்.
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கேள்வி நேரம் தொடங்குவதாக அறிவித்ததையடுத்து, பாஜக உறுப்பினா்கள் முழக்கமிடுவதை நிறுத்தினா்.
இதே போல மாநிலங்களவை தொடங்கியபோதும் பாஜக எம்.பி.க்கள் எழுந்து நின்று மோடியை வாழ்த்தி முழக்கமிட்டனா். அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் பேசத் தொடங்கியதும் பாஜக எம்.பி.க்கள் முழக்கமிடுவதை நிறுத்திக் கொண்டனா்.