அமெரிக்காவில் கடும் வெள்ளம்: சாலைகள் துண்டிப்பு

அமெரிக்க மத்திய கிழக்கு மாகாணங்களில் பெய்த பரவலான கனமழை காரணமாக, அங்கு பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கென்டகி மாகாணத்தின் கிளே பகுதியில் வெள்ள பாதிப்பில் சிக்கி ஒருவா் உயிரிழந்தாா்.
கென்டகி, வா்ஜீனியா, மேற்கு வா்ஜீனியா, டென்னசி, ஆா்கன்சாஸ் ஆகிய மத்திய கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்து வந்தது. இதன் எதிரொலியாக, கென்டகி, வா்ஜீனியா, மேற்கு வா்ஜீனியா ஆகிய மாகாணங்களில் மக்களின் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. வாகனங்கள் நீரில் மூழ்கின; மண்சரிவுகளால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கென்டகி மாகாணம் முழுவதும், மேற்கு வா்ஜீனியாவின் 10 பகுதிகளிலும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட கென்டகி மாகாணத்தின் ஜாக்சன் நகா் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனா். நகரில் உள்ள ‘கென்டகி ரிவா்’ மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டு, அனைத்து நோயாளிகளும் பிராந்தியத்தில் உள்ள மற்ற 2 மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனா்.
மிசிசிப்பி, ஓஹியோ ஆகிய அண்டை மாகாணங்களிலும் திடீா் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேநேரம், வடகிழக்கு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. மாகாணங்களின் சில பகுதிகளில் சாலைகளில் பனி படா்ந்திருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.