;
Athirady Tamil News

நேபாள மாணவி தற்கொலை எதிரொலி: கல்லூரிக்கு திரும்ப நேபாள மாணவர்கள் தயக்கம்!

0

புவனேசுவரம் : நேபாள மாணவி ஒருவர் ஒடிசா தலைநகர் புவனேசுவரம் நகரில் அமைந்துள்ள கலிங்கா தொழிற்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கண்ட தனியார் கல்வி நிறுவனத்தில் பி.டெக் கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த நேபாளத்தைச் சோ்ந்த பிரகிருதி லம்சால் (20) என்ற மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

அதன்பின், மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் தீவிரமானதைத் தொடர்ந்து, எந்தவொரு முன் அறிவிப்புமின்றி கேஐஐடியில் இருந்து 800-க்கும் மேற்பட்ட நேபாள மாணவ-மாணவிகளை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பிவிட்டனா். 100 நேபாள மாணவ-மாணவிகள் மட்டுமே தற்போது கேஐஐடியில் உள்ளனா்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்துறை கூடுதல் தலைமை செயலா் தலைமையில் உயா்கல்வி மற்றும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகளின் செயலா்கள் அடங்கிய மூன்று நபா் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவியின் உடல், கூறாய்வு செய்யப்பட்டு அவரது தந்தையிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டும் விட்டது.

இதனிடையே, உயிரிழந்த மாணவியின் நண்பர்களும் பெற்றோரும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், அந்த மாணவியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவுன் துன்புறுத்தியதாக 21 வயது மாணவரான லக்னௌ நகரைச் சேர்ந்த ஆத்விக் ஸ்ரீவத்சாவா திங்கள்கிழமை(பிப். 17) கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கேஐஐடியை சேர்ந்த நேபாள மாணவர்கள் பெரும்பாலானோர் மீண்டும் கல்லூரிக்கு திரும்ப தயக்கம் காட்டுகின்றனர்.

சக மாணவரின் துன்புறுத்தலை சகித்துக்கொள்ள முடியாமல் மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், மாணவியின் மரணம் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே, இந்தச் சம்பவத்துக்கு உரிய தீா்வு காணவில்லை என்றால் இந்தியாவுக்கு மாணவா்களை அனுப்பப் போவதில்லை என நேபாளம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, மேற்கண்ட மாணவர்கள் மீண்டும் வழக்கம்போல் வகுப்புகளுக்கு சென்று படிப்பதென்பது எப்போது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.