;
Athirady Tamil News

உக்ரைன் தொடர்பில் பிரான்ஸ் – பிரித்தானியா திட்டத்தை வரவேற்ற அமெரிக்கா

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீதான ஜெலென்ஸ்கியின் விமர்சனங்களை கடுமையாக கண்டித்த வெள்ளை மாளிகை, உக்ரைன் தொடர்பில் பிரான்ஸ் – பிரித்தானியா முன்வைத்துள்ள திட்டத்தை வரவேற்றுள்ளது.

அவமானப்படுத்துவது முறையல்ல
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால், 30,000 பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய இராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் திட்டத்தை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

குறித்த தகவலை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார். ஜெலென்ஸ்கியை சர்வாதிகாரி என்று ட்ரம்ப் முத்திரை குத்தியதை அடுத்து அமெரிக்க-உக்ரைன் உறவில் திடீரென்று விரிசல் விழுந்துள்ளது.

ட்ரம்புக்கு பதிலடியாக ரஷ்யாவின் பொய்க்குதிரையில் ட்ரம்ப் சவாரி செய்வதாக ஜெலென்ஸ்கி வெளிப்படையாக விமர்சித்துள்ளார். இந்த நிலையில், வியாழக்கிழமை வால்ட்ஸ் தெரிவிக்கையில், உக்ரைனிடம் இருந்து கொஞ்சம் பாராட்டுதலை எதிர்பார்ப்பதாகவும், அவமானப்படுத்துவது முறையல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் தரப்பில் கூறப்பட்ட சில கருத்துகள் ஏற்புடையது அல்ல என்றும் அவை ஜனாதிபதி ட்ரம்பை அவமானப்படுத்துவதாகும் என்றார். மேலும், உக்ரைன் போர் தொடர்பில் அமெரிக்கா பல பில்லியன் டொலர் தொகையை செலவிட்டுள்ளது என்றும், அதற்கு ஈடாக கனிம வளங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்றும் வால்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் திட்டமல்ல
உண்மையில் 100 பில்லியன் டொலர் செலவிட்டு, 500 பில்லியன் டொலர் கனிம வளங்களை கொள்ளையிடவே ட்ரம்ப் திட்டமிடுவதாக அரசியல் நோக்கர்கள் விமர்சித்துள்ளனர்.

கனிம வளங்கள் தொடர்பில் ட்ரம்ப் முன்வைக்கும் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றே உக்ரைன் கூறி வருகிறது. இதுவே ட்ரம்பை மொத்தமாக கொந்தளிக்க வைத்துள்ளது.

மேலும், போர் நிறுத்தம் என்பது ட்ரம்பின் திட்டமல்ல என்றும் கூறுகின்றனர். சவுதி அரேபியாவில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை என்பது ரஷ்யா – அமெரிக்கா உறவை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் என்றே கூறுகின்றனர்.

மேலும், கனிம வளங்கள் தொடர்பான சமீபத்திய வரைவு உக்ரைன் சட்டங்களுக்கு உட்படலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அடுத்த சில நாட்களில் கனிம வளங்கள் தொடர்பான ஒப்பந்தம் முன்னெடுக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.