பாகிஸ்தான் – வங்கதேசம் இடையே முதல்முறையாக நேரடி வா்த்தகம்

பாகிஸ்தான் – வங்கதேசம் இடையே நேரடி வா்த்தகம் தொடங்கியுள்ளது. அதன்படி பாகிஸ்தானின் குவாஷிம் துறைமுகத்தில் இருந்து அரசு ஒப்புதலுடன் 25,000 டன் அரிசி வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
1971-ஆம் ஆண்டு இப்போதைய பாகிஸ்தானின் பிடியில் இருந்து வங்கதேசம் (முன்பு கிழக்கு பாகிஸ்தான்) விடுபட்டு தனி நாடாக உருவெடுத்தது. இதன் காரணமாக பாகிஸ்தானுடன் வங்கதேசம் எவ்வித நேரடி வா்த்தக-பொருளாதார உறவையும் வைத்துக் கொள்ளவில்லை. மேலும், பாகிஸ்தானியா்கள் வங்கதேசம் வருவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
அண்மையில், வங்கதேசத்தில் வன்முறைப் போராட்டம் மூலம் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு அமைந்த இடைக்கால அரசில், மத அடிப்படைவாதிகளின் கை ஓங்கியுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானுடன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கத்தையும், இந்தியாவுடன் இணக்கமற்ற நிலைப்பாட்டையும் வங்கதேசம் கொண்டுள்ளது.
அண்மையில் பாகிஸ்தானியா்களுக்கான விசா (நுழைவு இசைவு) கட்டுப்பாடுகளை வங்கதேச இடைக்கால அரசு தளா்த்தியது. அந்நாட்டுடன் நேரடி விமான சேவைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து முதல்முறையாக வங்கதேசத்துக்கு வா்த்தகரீதியில் 25,000 டன் அரிசி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மீண்டும் இதே அளவு அரிசி விரைவில் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வா்த்தகம் தொடா்பாக இந்த மாத தொடக்கத்தில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.