வெற்றி பெற்றும் பிரெட்ரிக் மெர்ஸ் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: அடுத்து என்ன?

ஜேர்மன் தேர்தலில் அதிக இருக்கைகளைக் கைப்பற்றியும் பிரெட்ரிக் மெர்ஸால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது.
காரணம் இதுதான்
அதாவது, ஜேர்மனியில் ஆட்சி அமைக்க ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு 316 இருக்கைகள் வேண்டும்.
ஆனால், மெர்ஸின் CDU/CSU கட்சியிடம் 208 இருக்கைகள் மட்டுமே உள்ளன.
ஆகவே, வேறொரு கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்துத்தான் மெர்ஸ் ஆட்சி அமைக்க முடியும்.
தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது புலம்பெயர்தல் எதிர்ப்பு, வலதுசாரிக் கட்சியான AfD கட்சி.
அக்கட்சியுடன் மெர்ஸ் கூட்டணி அமைப்பதில் ஜேர்மன் மக்களுக்கு உடன்பாடு இல்லை. ஆகவே, AfD கட்சியுடன் கூட்டணி கிடையாது என மெர்ஸும் கூறிவிட்டார்.
குறைந்தபட்சம் 5 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தால்தான் ஒரு கட்சி நாடாளுமன்றத்துக்குள்ளேயே நுழைய முடியும். ஆனால், CDU கட்சியின் நட்புக் கட்சியான FDP கட்சி 5 சதவிகித வாக்குகளைக் கூட பெறமுடியவில்லை என்பதால், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு பறிபோய்விட்டது.
ஆக, மீண்டும் ஓலாஃப் ஷோல்ஸின் SPD கட்சியுடன் மட்டுமோ, அல்லது கிரீன்ஸ் கட்சியையும் சேர்த்துக்கொண்டோதான் மெர்ஸ் ஆட்சி அமைக்க முடியும்.
விடயம் என்னவென்றால், கடந்த முறை கூட்டணி அமைக்க நீண்ட நாட்கள் ஆனது. ஆகவே, இம்முறை எப்படியாவது சீக்கிரம் ஆட்சி அமையும் என தான் நம்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைகள் தலைவரும் மூத்த தூதருமான Kaja Kallas தெரிவித்துள்ளார்.