உக்ரைனில் 200-க்கும் மேற்பட்ட டிரோன்களால் ரஷியா தாக்குதல்!

கீவ் : உக்ரைனில் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர வான்வழி தாக்குதலை ரஷிய படைகள் நடத்தியிருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் நள்ளிரவில் 200-க்கும் மேற்பட்ட டிரோன்களால் ரஷியா தாக்குதல் நடத்தியிருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். ரஷிய படைகள் 267 டிரோன்களை உக்ரைன் மீது ஏவியிருப்பதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கி 3 ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர வான்வழித் தாக்குதலாக ஞாயிற்றுக்கிழமை ரஷியா நிகழ்த்தப்பட்டிருக்கும் டிரோன் தாக்குதல் பார்க்கப்படுகிறது.
இது குறித்து உக்ரைன் விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷிய படைகளால் ஏவப்பட்ட 138 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாகவும் 119 டிரோன்கள் ரேடார் கண்காணிப்பிலிருந்து தப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியும் ரஷியா தாக்குதல் நிகழ்த்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் நள்ளிரவில் ரஷியா டிரோன் மழை பொழிந்ததால் அங்குள்ள 5 மாகாணங்களில் சேதங்களும் அதனால் பாதிப்பும் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது