300 நோயாளிகள் பாலியல் வன்கொடுமை: பிரான்ஸ் மருத்துவர் ஒப்புதல்

சிகிச்சைக்காக வந்த 300 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, முன்னாள் பிரான்ஸ் அறுவைசிகிச்சை மருத்துவர் மீது வழக்குத் தொடரப்பட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரான்ஸ் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்த 300 பேரில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது. வழக்கு விசாரணை ஆவணங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக மிக மோசமான குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்கள் அடைந்த காயங்களை ஆற்ற முடியாது என்று ஒப்புக்கொள்வதாக, மருத்துவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
விசாரணை தொடங்கிய முதல் நாளில், நீதிமன்றத்தில் பேசிய டாக்டர் ஜோல் லே நான் மிகவும் அறுவறுக்கத்தக்க செயல்களை செய்துள்ளேன். தான் ஏற்படுத்தும் காயங்கள் அழிக்கவோ, ஆற்றவோ முடியாது என்பதை தான் நன்றாகவே உணர்ந்திருந்ததாகவும், தான் செய்த குற்றங்களுக்கான பொறுப்பை தானே ஏற்றுக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
இவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
யார் இந்த ஜோல் லே?
கடந்த 2017ஆம் ஆண்டு ஜோல் லே மீது, அண்டை வீட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமி, தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாகக் கொடுத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரது வீட்டை சோதனை நடத்தினர்.
அப்போது, அவரது வீட்டிலிருந்து 3,00,000 புகைப்படங்களும் 650 மோசமான விடியோக்களும், அவர் செய்த பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி மருத்துவர் கைப்பட எழுதி வைத்திருந்த நோட்டுப் புத்தகங்களும் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து 4 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகளில் 2020ஆம் ஆண்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போதுதான், மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததை ஒப்புக் கொண்டார்.
ஆனால், இதில் மோசமான விஷயமே, பாதிக்கப்பட்ட குழந்தைகள் மயக்கத்தில் இருந்ததால், அது பற்றி எதுவும் தெரியாது. எனவே, மருத்துவர் அளித்த தகவல் மற்றும் கிடைத்த விடியோ, புகைப்படங்களின் அடிப்படையில், அவர் 158 ஆண்கள், ஏராளமான குழந்தைகள் 141 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் தொடங்கியிருக்கிறது.