;
Athirady Tamil News

தனது பாதுகாப்புக்காக இரண்டு பொலிஸார் வேண்டும் ; அர்ச்சுனாவின் வேண்டுகோள்

0

தனது பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றிய அவர் சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் நான் எதிர்கொள்ள நேர்ந்த சம்பவமொன்று எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதற்கிணங்க பெப்ரவரி 12ஆம் திகதி இரவு யாழ். வலம்புரி ஹோட்டலில் என் மீதும், எனது செயலாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

அது தொடர்பில் நான் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன். அந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனினும், நான் அறியாத வகையில் சடுதியாக எனக்கெதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் பாராளுமன்ற உறுப்பினரான எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் கனேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று கடந்த வாரங்களில் பல்வேறு கொலைச் சம்பவங்களும் நாட்டில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் எனக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் சிறப்புரிமையை முன்வைக்கின்றேன்.

அதன்படி எனக்கு இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை எனது பாதுகாப்புக்காக நியமிக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இது தொடர்பான வேண்டுகோளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் அனுப்புமாறு கேட்டுக்கொள்வதுடன், இந்த அவசர நிலையை கருத்திற்கொண்டு சாதகமான பதிலையும் உடனடியாக எதிர்பார்க்கின்றேன்” என்றார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சிறப்புரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.