;
Athirady Tamil News

இரணைமடுக்குளத்தின் கீழான 2025ம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்ச்செய்கைக் குழுக் கூட்டம்

0

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக்குளத்தின் கீழான 2025ம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்ச்செய்கைக் குழுக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை (24.02.2025) நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி கனகாம்பிகை அம்பாள் ஆலய முன்றலில், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

தற்போது குளத்தில் நீர்மட்டம் 36′ ஆக காணப்படுகின்ற நிலையில், இம் முறை 19, 164 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற் செய்கையும், அதற்கு மேலாக 382 ஏக்கர் உப உணவுப் பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.

கமக்கார அமைப்பினர் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதுடன், கழிவு நீர் வெளிச்செல்லாமல் பார்ப்பதனை உறுதி செய்தமையால் இத்தீர்மானம் எட்டப்பட்டது.

வயலில் இருந்து நீர் வெளியேறாதவாறு உரிமையாளரினால் பராமரிக்கப்பட வேண்டும். இவ்வாறு தவறும் பட்சத்தில் ஒரு தடவைக்கு 5,000.00 ரூபாய் தண்டப் பணமாக அறவீடு செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை(03.03.2025) காலை 10.00 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக நீர் விநியோக ஆரம்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த சிறு போக செய்கைக்கான வாய்க்கால் துப்பரவு, நீர் வழங்கல், கால்நடை கட்டுப்பாடு மற்றும் தண்டப்பண அறவீடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக் கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச செயலாளர், கண்டாவளை பிரதேச செயலாளர், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பொறியியலாளர், பிரதி கமநல உதவி ஆணையாளர், பிரதி விவசாய பணிப்பாளர் உள்ளிட்ட துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.