‘பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல’ – விவசாயிகள் மறுப்பு!

மகாராஷ்டிரத்தில் புல்தானா மாவட்ட மக்களின் முடி உதிர்தல் பிரச்னைக்கு கோதுமை காரணமல்ல என்று பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கூறியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு கடந்த சில வாரங்களாக திடீரென முடி உதிர்தல், தலைவலி, காய்ச்சல், தலையில் அரிப்பு, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. பெண்கள் உள்பட பெரும்பாலானோருக்கு தலைமுடி உதிர்ந்து வழுக்கையாக மாறியுள்ளது. இதில் இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அவர்களின் ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் அவற்றில் செலினியம் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்பட்ட கோதுமைதான் காரணம் என்று உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.
மேலும் பரிசோதனையிலும், மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட கோதுமையில் செலினியம் அளவு 600 மடங்கு அதிகமாக இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஹிம்மத்ராவ் பவாஸ்கர் தெரிவித்தார். அந்த கோதுமையை சாப்பிடுவதை நிறுத்தியவுடன் முடி உதிர்தல் பிரச்னை குறைந்ததாகவும் அந்த மருத்துவரும் மக்களும் கூறியுள்ளனர்.
ஆனால், மத்திய உணவுத் துறை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களின் தலைமுடி உதிர்வுக்கு கோதுமையில் செலினியம் அளவு அதிகமாக இருந்ததுதான் காரணம் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் பஞ்சாப்தான் அதிக கோதுமையை வழங்குகும் நிலையில் வேறு வந்த மாநிலமும் இதுபோன்றதொன்று புகாரைத் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளது.
ஐசிஎம்ஆர் மற்றும் மாநில மற்றும் மத்திய அரசின் நிறுவனங்கள் நிலைமையைக் கண்காணித்து வருவதுடன் காரணத்தைக் கண்டறியவும் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டாக்டர் பவாஸ்கரின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
பஞ்சாபின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி என்று பொருளாதார வல்லுநரான பேராசிரியர் ரஞ்சித் சிங் குமான் கூறினார்.
“இது பஞ்சாபின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ஒரு ஆதாரமற்ற சதி. பசுமைப் புரட்சியை முன்னெடுத்துச் சென்ற மாநிலம் பஞ்சாப். பல தசாப்தங்களாக இந்தியாவின் விவசாயத் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது. புல்தானா மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட கோதுமை பல தலைமுறைகளாக பஞ்சாபில் பயிரிடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை இதுபோன்றதொரு பிரச்னை ஏற்படவில்லை. மேலும் மக்களின் முடி உதிர்தலுக்கு கோதுமைதான் காரணம் என்று எந்தவொரு ஆய்விலும் உறுதி செய்யப்படவில்லை” என்றார்.
விவசாய அமைப்பின் தலைவர் சர்வன் சிங் பாந்தர் என்பவரும் இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கூறியதுடன், நாங்கள் விளைவிக்கும் கோதுமை உண்மையிலேயே முடி உதிர்தலை ஏற்படுத்தியிருந்தால், அதை தினமும் உட்கொள்ளும் நாங்கள் முதலில் அதன் விளைவுகளை அனுபவித்திருப்போம், ஆனால், நாங்கள் இதுபோன்ற ஒரு பிரச்னையை ஒருபோதும் சந்தித்ததில்லை என்று கூறியுள்ளார்.
அதேநேரத்தில் பவாஸ்கர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஹிம்மத்ராவ் பவாஸ்கர், ஜன. 25, 26 தேதிகளில் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீர், ரத்த மாதிரிகளை ஆராய்ச்சி செய்துதான் இதனைக் கண்டறிந்துள்ளதாகவும் இதற்காக ரூ. 92,000 செலவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
18 கிராமங்களைச் சேர்ந்த 275 மக்கள் முடி உதிர்தல், வழுக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்சிதை மாற்றத்திற்கு அவசியமான ஒரு சிறிய கனிமமான செலினியம், இயற்கையாகவே மண், நீர் மற்றும் சில உணவுகளில் இருக்கிறது. உடலுக்கு செலினியம் தேவை என்றாலும், அதிகப்படியாக உடலில் சேரும்போது பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.