;
Athirady Tamil News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய 4 கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் – சி.வீ.கே.சிவஞானம்

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோருக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில், நடைபெற உள்ள உள்ளுராட்சி தேர்தல்கள் தொடர்பாக தங்கள் மூவருடனும் கலந்துரையாடியது தொடர்பானது,

இக்கலந்துரையாடல் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தங்களது கட்சிகளும் எமது கட்சியும் இணைந்து ஒன்றாகப் போட்டியிட்டது போல இந்தத் தேர்தலிலும் சில இடங்களிலாவது ஒன்றாக போட்டியிடுவது பற்றி ஆராய்வதற்கே ஆனது. இது சம்பந்தமாக கலந்துரையாட 02/3/2025 ஆம் திகதியை செல்வம் அடைக்கலநாதன் உடன் நிர்ணயித்திருந்தோம்.

எனினும் அந்த முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது தாங்கள் எமது கட்சி யைத் தவிர்த்து வேறு ஒரு கூட்டணியை 23/2/2025 ஆம் திகதி உருவாக்கியமை ஏமாற்றம் அளிப்பதாகவும் கவலை அளிப்பதாகவும் அமைந்தது. இது எமக்கு தனித்துப் போட்டியிடும் சூழலை உருவாக்கியமை இயல்பானதும் தவிர்க்க முடியாதாதமாகும்.

நாம் இந்த முயற்சியை மேற்கொண்டது தனிய தேர்தலுக்காக அல்ல. எமது முயற்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய இந்த நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற நோக்கத்துடனே ஆகும் என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன். இந்த முயற்சியை மேலும் தொடரவே விரும்புகிறேன் இதற்கான தங்களது இணக்கம் இருக்குமானால் நாம் தொடர்ந்து பேசலாம்.

அதேநேரம் நாம் தனித்து போட்டியிட்டாலும் தேர்தலுக்குப் பின் இணைந்து வடக்கு- கிழக்கில் உள்ள சகல தமிழ் உள்ளூராட்சி மன்ற நிர்வாகங்களையும் நாம் கைப்பற்றும் முகமாக தேர்தலுக்குப் பின் செயற்படுவதற்கான உடன்பாடு ஒன்றை தேர்தலுக்கு முன் னரே ஏற்பாடு செய்தல். இதற்கும் தங்களது உடன்பாடு இருக்கும் என்றால் நாம் தொடர்ந்து பேசலாம். தங்களது துரித பதிலுக்கு நன்றி உடையவராவோம் – என்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.