தென் ஆப்பிரிக்கா: புதியதாக மூன்று குரங்கு அம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு!

தென் ஆப்பிரிக்கா நாட்டில் மூன்று புதிய குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறையின் செய்தி தொடர்பாளர் ஃபோஸ்டர் மொஹாலே கூறியதாவது, இந்த மூன்று புதிய குரங்கு அம்மை பாதிப்புகளும் அந்நாட்டின் கௌதெங் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தாண்டு (2025) துவங்கியதிலிருந்து இந்த நோயின் பாதிப்புகள் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதில், காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் பரவி வரும் கிளேடு I எம்பாக்ஸ் வைரஸின் பாதிப்பானது, உகாண்டா நாட்டிற்கு சென்று திரும்பிய 30 வயது ஆண் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த நோயின் பரவுதலைக் கண்டறியும் குழுவினர் மேற்கொண்ட சோதனையில் 27 வயது ஆண் மற்றும் 30 வயது பெண் ஆகிய இருவருக்கு இந்த நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் அந்நாட்டில் பரவி கட்டுப்படுத்தப்பட்ட குரங்கு அம்மை நோயின் பாதிப்பானது 3 மரணங்கள் உள்பட 25 இல் இருந்து 28 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உலக சுகாதார அமைப்பு (WHO) குரங்கு அம்மை நோயை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. மேலும், இந்த நோயின் பரவலைத் தடுத்து உயிர்களைக் காப்பாற்ற உலக நாடுகள் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.