;
Athirady Tamil News

மார்ச் 4 முதல் புதிய வரி விதிப்பு அமல்: டிரம்ப்பால் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு?

0

சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு மார்ச் 4 முதல் அமல்படுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்கவும், சீனாவின் வர்த்தக முறைகேடுகளை தடுக்கவும் சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளுக்கும் புதிய வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பு பிப்ரவரியில் அமலுக்கு வருவதாக அறிவித்த நிலையில், மேலும் ஒருமாத கால அவகாசமும் வழங்கினார்.

இந்த நிலையில், மார்ச் 4 ஆம் தேதி முதல் இந்த புதிய வரி விதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து, அவர் கூறியதாவது “சீனாவில் தயாரிக்கப்படும் போதைப் பொருள்கள், வலி நிவாரணிகள் வடிவில் மெக்சிகோ, கனடா நாடுகள் மூலம் அமெரிக்காவுக்குள் வருகின்றன. இவ்வாறான போதைப் பொருள்களால் மட்டும் அமெரிக்காவில் கடந்தாண்டு 1 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

போதைப் பொருள்களால் அமெரிக்கா தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. ஆகையால், இந்த போதைப் பொருள் விநியோகம் நிறுத்தப்படும்வரையில், 3 நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு தொடரும்’’ என்று தெரிவித்தார்.

டிரம்ப் விதித்துள்ள புதிய வரியின்படி, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவிகித வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவிகித வரியும் விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஆற்றல் துறை சார்ந்த இறக்குமதிகளுக்கு 10 சதவிகித வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் புதிய வரியை விதிப்பதற்கு வேறு சில காரணங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. சீனாவிலிருந்து அதிகளவில் பொருள்கள் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படுவதால், அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி குறைந்து, அமெரிக்காவின் பணப்புழக்கம் சீனாவுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.

இதனால், அமெரிக்காவின் உள்ளூர் தொழில்துறையை மீட்கும்வகையில், சீன பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்க டிரம்ப் முடிவு செய்ததாகவும் கூறுகின்றனர். புதிய வரி விதிப்பால் சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தக உறவு கடுமையாக பாதிப்படையலாம்.

மேலும் இந்த புதிய வரி விதிப்பால், உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதுமட்டுமின்றி, டிரம்ப்பின் புதிய வரிகளை எதிர்த்து, அதிகாரிகளுடன் அமெரிக்க வணிக சங்கம் ஆலோசனை நடத்தி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.