;
Athirady Tamil News

வாட்ஸ்ஆப் ஆடியோவில் முத்தலாக்.. கணவர் மீது மனைவி புகார்!

0

கேரள மாநிலம் காசர்கோட்டில் வரதட்சிணைக் கொடுமை செய்து வாட்ஸ் ஆப்பில் மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கல்லுராவியைச் சேர்ந்த 21 வயது பெண்ணை அவரது கணவர் அப்துல் ரசாக் வாட்ஸ் ஆப் ஆடியோ பதிவு மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

நெல்லிக்கட்டாவைப் பூர்வீகமாக கொண்ட ரசாக், தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரிந்து வரும் நிலையில், தன்னுடைய மனைவியின் தந்தைக்கு முத்தலாக் பதிவு செய்யப்பட்ட வாட்ஸ் ஆப் ஆடியோ பதிவை கடந்த பிப். 21 ஆம் தேதி அனுப்பினார்.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரில், தன்னுடைய மாமனார் மற்றும் மாமியார் வரதட்சிணைக் கேட்டு துன்புறுத்தி வந்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். அப்பெண் செய்தியாளர்களிடம் கூறுகையில், “என் கணவரின் தாயும் சகோதரியும் என்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர், அவர்கள் விவாகரத்துக் கொடுத்துவிடுவதாக மிரட்டி வந்தனர்.

ரசாக் 50 சவரன் தங்கத்தை வரதட்சிணையாக கேட்டார், ஆனால் திருமணத்தன்று 20 சவரன் மட்டுமே கொடுத்தோம். வரதட்சிணை குறைவாக அளித்ததால் பல சித்ரவதைகளை நான் அவர்களிடம் அனுபவித்தேன்.

வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் என்னைப் பூட்டிவைத்து உணவுக் கொடுக்காமல் மனஉளைச்சலுக்கு ஆளாக்கினார்கள்” என்றார்.

மேலும், ரசாக் தன்னிடம் ரூ. 12 லட்சம் பணத்தை ஏமாற்றியதாக அப்பெண்ணின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து ஒஸ்துர்க் காவல் நிலையத்தில் பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.