;
Athirady Tamil News

டிரம்ப் அறிமுகப்படுத்திய 13 வயது உளவுத்துறை அதிகாரி! சோகப் பின்னணி என்ன?

0

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆற்றிய உரையின் போது அறிமுகப்படுத்திய 13 வயது உளவுத்துறை அதிகாரி யார்? அவரின் பின்னணி என்ன? என்பது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் 47-வது அதிபரான டொனால்ட் டிரம்ப், ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உரையாற்றிய டிரம்புக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.

இதனிடையே, ஒரு சிறுவனை அறிமுகப்படுத்திய டிரம்ப் அவருக்கு உளவுத்துறை அதிகாரி பதவியை வழங்கி அவரை கௌரவப்படுத்தினார். மேலும், அந்தச் சிறுவனுக்கு உளவுத்துறை அதிகாரிக்கான பேட்ஜும் வழங்க உளவுத்துறை இயக்குநர் கர்ரனிடம் டிரம்ப் உத்தரவிட்டார்.

அந்தச் சிறுவனை அறிமுகப்படுத்திய டிரம்ப், “எங்கள் காவல்துறையை உண்மையிலேயே நேசிக்கும் ஒரு இளைஞன் எங்களுடன் இருக்கிறான். அவன் பெயர் டிஜே டேனியல்” எனக் கூறும்போது டேனியலின் தந்தை அவனைத் தூக்கி அனைவரின் முன்னிலையிலும் உற்சாகப்படுத்தினார்.

நாடாளுமன்றம் முழுவதும் திரண்டிருந்த எம்பிக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு டிஜே..! டிஜே..! என கோஷமிட்டு ஆரவாரப்படுத்தினர்.

டேனியல் குறித்து அதிபர் டிரம்ப் பேசுகையில், “எங்கள் காவல்துறையை உண்மையிலேயே நேசிக்கும் ஒரு இளைஞன் எங்களுடன் இணைகிறான். அவன் பெயர் டிஜே டேனியல். அவனுக்கு 13 வயதாகிறது. எப்போதும் ஒரு காவல் அதிகாரியாக வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறான்.

மூளைப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதிலிருந்து, புற்றுநோயை எதிர்த்துத் துணிச்சலாகப் போராடி வருகிறார். 5 மாதங்கள் மட்டுமே வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறியிருந்தபோதிலும் அதனை எதிர்த்து போராடிவருகிறார்” என்று கூறினார்.

யார் அந்த டேனியல்?

யார் அந்த சிறுவன்? எதனால் அவருக்கு இந்தப் பதவி என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், 2018 ஆம் ஆண்டில் 4 மாதங்கள்தான் இந்தச் சிறுவன் உயிர் வாழ்வான் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர் என்று கூறினால் நம்பமுடிகிறாதா?

ஆம்.. 2018 ஆம் ஆண்டில் டிஜே டேனியலுக்கு மூளையில் புற்றுநோய் இருப்பது கண்டறிப்பட்டது. அவர் 5 மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என மருத்துவர்களும் கைவிரித்துவிட்டனர். இதுவரை டேனியலுக்கு 13 முறை மூளை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

டேனியலுக்கு அரசுப் பதவிகளை வகிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இருப்பினும், டேனியல் இந்த மாதிரியான கௌரவப் பதவிகளை வகிப்பது இது முதல் முறை கிடையாது. இவர் இதுவரை சட்ட அமலாக்கத்துறை உள்பட 900-க்கும் அதிகமாக கௌரவப் பதவிகளை வகித்திருக்கிறார் என்பதே ஆச்சரியமான உண்மை.

குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் உள்ள அதிகப்படியான ரசாயனத்தால் டேனியலுக்கு புற்றுநோய் ஏற்பட்டது ஆய்வில் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருதரப்பினரும் அதிபர் உரை தொடங்கியதிலிருந்தே மோதிக்கொண்டிருந்தாலும், டிஜே டேனியலுக்காக இருதரப்பினரும் சேர்ந்து உற்சாகப்படுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த செயல் டிஜேவின் விருப்பத்தை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கான புற்றுநோய் பிரச்னையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதாக இணையதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.