ரஷியாவிடம் இருந்து ரூ.2,156 கோடிக்கு டி-72 பீரங்கி என்ஜின்கள்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

டி-72 ரக பீரங்கிகளுக்கு என்ஜின்களை கொள்முதல் செய்யும் நோக்கில் ரஷியாவை சோ்ந்த ரோசோபோரன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ரூ.2,156 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இந்த ஒப்பந்தம் மூலம் சென்னை-ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலைக்கு நவீன தொழில்நுட்பங்களையும் ரஷிய நிறுவனம் பகிரவுள்ளது. இது ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை மேலும் ஊக்குவிப்பதாக அமையும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
இந்திய ராணுவத்தின் மிக முக்கிய பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாக கருதப்படும் டி-72 பீரங்கிகளில் தற்போது 780 எச்.பி. ஆற்றலுடைய என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், 1,000 எச்.பி. என்ஜின்களை பொருத்துவதற்கான ஒப்பந்தத்தில் ரோசோபோரன் ஏற்றுமதி நிறுவனத்துடன் இந்தியா கையொப்பமிட்டுள்ளது.
இது இந்தியாவின் போா்க்கள செயல்பாட்டை மேலும் அதிகரிக்கும் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.