யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வு -2025

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வானது மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் தலைமையில் இன்றைய தினம் சனிக்கிழமை (08.03.2025) காலை 8.30 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .
இது தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில் இந்நிகழ்வானது தொழில் தேடுநர்கள் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான அரிய சந்தர்ப்பம் என தெரிவித்ததுடன், இந் நிகழ்வில் 45 ற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் இந்நிகழ்விற்கு அனுசரனை வழங்கிய நிறுவனங்களுக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.
இந் நிகழ்வில் தனியார் உற்பத்தி நிறுவனங்கள், ஆடை உற்பத்தித் துறை, பாதுகாப்புச் சேவை, தாதியர் வேலைவாய்ப்பு, ஹோட்டல் துறை, கணக்கியல் துறை, காப்புறுதித் துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் துறை போன்ற தொழில் வெற்றிடங்களிற்கான ஆட்சேர்ப்பதற்கான நிறுவனங்கள் மற்றும் கணினித்துறை, தாதியர் பயிற்சி நெறி, கப்பல் துறை ஹோட்டல் முகாமைத்துவம் போன்ற பாட நெறிகளை நடாத்தும் நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் வங்கிக் கடன் வசதிகளை வழங்கும் நிதி நிறுவனங்கள் போன்றவை உள்ளடக்கிய வகையில் தொழிற் சந்தை நடைபெற்றது.
இன்றைய தொழிற் சந்தையில் 400 இற்கு மேற்பட்ட தொழில் நாடுவோர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் உதவி மாவட்ட செயலாளர் ,மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் , வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், தொழில் தருநர்கள், மற்றும் தொழில் தேடுவோரும் பங்குபற்றியிருந்தனர்.