;
Athirady Tamil News

ரமலான்: 10 லட்சம் ஆடுகளை இறக்குமதி செய்கிறது அல்ஜீரியா!

0

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கும் அல்ஜீரியாவின் தேவைக்கு ஏற்ப 10 லட்சம் ஆடுகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருப்பதாக, அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.

ஞாயிறன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, அல்ஜீரியா அதிபர் அப்தெல்மத்ஜித் டெப்பவுனே, வறட்சியால் ஆடுகள் குறைந்து, ரமலான் பண்டிகையின்போது தேவை அதிகரிப்பதால் விலை கடுமையாக உயர்வதைத் தடுக்கும் வகையில், வெளிநாடுகளிலிருந்து ஆடுகளை இறக்குமதி செய்வது குறித்து திட்டமிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே, அல்ஜீரியாவில், ராணுவ ஆதரவுடன் நடைபெற்று வரும் அரசால், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு, மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், அதனைக் குறைக்கவே, அந்நாட்டு அதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, ரமலான் மாதம் முழுக்க, அல்ஜீரிய சந்தைகளில், தேவையான உணவுப் பொருள்கள் வருவதை உறுதி செய்து நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில், அதன் அடுத்தகட்டமாக, ஆடுகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

வட ஆப்ரிக்க நாடான அல்ஜீரியா, கடந்த சில ஆண்டுகளாக வழக்கத்தைவிடக் குறைவான மழை, அதிக வெப்பம் காரணமாக கடுமையான வறட்சியை சந்தித்து வருகிறது.

வறட்சியால் ஒருபக்கம் விவசாயம் குறைந்து உணவுப் பொருள்களின் விலை ஏற்றமும், மறுபக்கம் கால்நடைகளுக்கான தீவனங்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்து, கால்நடைகளின் எண்ணிக்கையும் குறைந்து மக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் ஆடுகளை இறக்குமதி செய்து, ரமலான் பண்டிகையின்போது கால்நடைகளின் விலை உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுகக் அரசு திட்டமிட்டு வருகிறது. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 10 லட்சம் ஆடுகளை இறக்குமதி செய்து, அரசின் நியாயவிலைக் கடைகள் மூலம் அதனை குறைந்த விலையில் விற்பனை செய்யும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு, சில பகுதிகளில் ஒரு ஆண்டு விலை கிட்டத்தட்ட 2 லட்சம் அல்ஜீரியன் திணார் அளவுக்கு விற்பனையானது. இது நாட்டின் குறைந்தபட்ச கூலியை விட 10 மடங்கு அதிகம். இதனால், ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

எனவேதான், இந்த ஆண்டு ஆடுகளை இறக்குமதி செய்து, ஏழை எளிய மக்களும் தங்களது ரமலான் கடமையை முழுமையாக நிறைவேற்ற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளைப் போல இந்த ஆண்டு கடைகளில் பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு பல மணி நேரம் காத்திருந்துவாங்கும் நிலை இல்லை என்று இப்போது மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.