சிறையிலிருந்து தப்பியோடிய 50க்கும் மேற்பட்ட கைதிகள்!

இந்தோனேசியாவில் சிறைக்கைதிகள் 50க்கும் மேற்பட்டோர் தப்பியோடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆசிய நாடான இந்தோனேசியாவில் உள்ள குடகேன் நகரின் பிரதான சிறையில் 400 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், அங்கு தங்குவதற்கு போதைய இடம் இல்லை என்று கைதிகள் குற்றம்சாட்டினர். அதாவது 100 பேர் மட்டுமே தங்குமிடத்தில் 400 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் கடுமையான கூட்ட நெரிசல் இருப்பதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.
மேலும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கைதிகளில் பலர் போராட்டத்தில் இறங்கினர்.
ஆயினும் முன்னேற்றம் ஏற்படாததால், கைதிகள் பலர் சிறையில் இருந்து தப்பிச் செல்ல முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காலை உணவுக்காக வரியில் நின்றிருந்த கைதிகள், திடீரென கதவை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
உடனே விரட்டிச் சென்ற பொலிஸார், தப்பியோடிய 50க்கும் மேற்பட்டோரில் 20 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
எனினும், பலர் தலைமறைவான நிலையில் அவர்களை கைது செய்யும் பணியில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.
போதிய காவலர்கள் பணியில் இல்லாத சமயத்தில் கைதிகள் தப்பியோடியதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில் கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.