ரயில் கடத்தல் விவகாரம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி!

பலூசிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் இந்தியா பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா பதிலடி வழங்கியுள்ளது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து கைபா் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவா் நகருக்கு 9 பெட்டிகள்,400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஜாஃபா் விரைவு ரயில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் 21 பயணிகள், 4 ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். கடுமையான போராட்டங்களுக்குப் பின்னர் ரயிலை கடத்திய அனைத்து தீவிரவாதிகளையும் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.
இதனைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய் (மார்ச். 11) அன்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஷஃப்கத் அலி கானிடம் ரயில் கடத்தல் சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஷஃப்கத் அலி கான், ”ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலை திட்டமிட்டனர். அவர்களுடன் பயங்கரவாதிகள் நேரடித் தொடர்பில் இருந்தனர்.
பலூசிஸ்தான் அமைப்பினரைப் போன்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதைத் தவிர்க்குமாறு ஆப்கானிஸ்தானிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம்.
“இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள், அதற்கு நிதியுதவி அளிப்பவர்களை நீதியின் முன் நிறுத்த பாகிஸ்தான் அரசுடன் ஒத்துழைக்குமாறு ஆப்கானிஸ்தானை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
பலூசிஸ்தான் அமைப்பினரின் முந்தைய தாக்குதல்களில் இந்தியா மீது குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில் தற்போது ஆப்கன் மீது குற்றம் சாட்டியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
“எங்கள் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. இப்போதும் அந்த உண்மைகள் மாறவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஆதரிப்பதில் இந்தியா ஈடுபட்டுள்ளது,” என்று அவர் குற்றம் சாட்டினார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த போது, ”இந்தியா தனது அண்டை நாடுகளை வலுவிழக்கச் செய்யும் முயற்சியில் உலகளவிலான படுகொலைகளை நிகழ்த்தி வருகின்றது” என்றும் அவர் கூறினார்.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களுடன் பேசுகையில், “பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம்.
பாகிஸ்தான் மற்றவர்களின் மீது பழி சுமத்துவதற்கு முன்பு உலகளாவிய பயங்கரவாத மையம் எங்கே உள்ளது என்பது முழு உலகிற்கும் தெரியும்” என்றார்.
பாகிஸ்தான் தனது சொந்த உள்நாட்டு பிரச்சினைகள், தோல்விகளுக்காக மற்றவர்கள் மீது பழியை சுமத்துவதற்குப் பதிலாக, தங்கள் நாட்டின் உள்ளே முதலில் பார்க்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.