இந்திய மாணவியை அதிரடியாக நாட்டை விட்டு வெளியேற்றிய ட்ரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவி ஒருவர் நாட்டிலிருந்து தாமாகவே வெளியேறியுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாணவர் விசா ரத்து
அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்கேற்றதற்காக அவரது மாணவர் விசா ரத்து செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது என்றே கூறப்படுகிறது.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரித்ததற்காக ரஞ்சனி சீனிவாசன் என்பவரின் விசா மார்ச் 5 அன்று ரத்து செய்யப்பட்டது.
ரஞ்சனி சீனிவாசன் ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்றும், மார்ச் 11ம் திகதி அவர் தாமாகவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்றும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் முன்னர், நாட்டை விட்டு தாமாகவே வெளியேறும் நடவடிக்கை என்பது அமெரிக்க இராணுவ விமானத்தில் விலங்கிடப்பட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் அபாயத்தைத் தவிர்க்கிறது.
இந்த நிலையில், உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் குறிப்பிடுகையில், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எவருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் உரிமை இல்லை என்றார்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான
மேலும், அமெரிக்காவில் வசிக்கவும் படிக்கவும் விசா வழங்கப்படுவது என்பது ஒரு சிறப்புரிமை. ஆனால் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும்போது, அந்த சலுகையை ரத்து செய்ய அமெரிக்க நிர்வாகத்திற்கு உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஒருவர் நாட்டைவிட்டு தாமாகவே வெளியேறுவதில் மகிழ்ச்சி என்றும் கிறிஸ்டி நோயம் குறிப்பிட்டுள்ளார். ரஞ்சனி சீனிவாசன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடலில் முனைவர் பட்டம் பெற்ற மாணவராவார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவான மாணவர் போராட்டங்களின் களமாக கொலம்பியா பல்கலைக்கழகம் இருந்து வந்தது. கடந்த வாரம், பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் கொலம்பியா பல்கலை மாணவர் மஹ்மூத் கலீல் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு வளாகத்தில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் இவர் முன்னணியில் இருந்தார். அவரது கிரீன் கார்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், நீதிபதி ஒருவர் கலீலின் நாடுகடத்தலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.