அமிருதசரஸில் ஹிந்து கோயில் மீது குண்டுவீச்சு!

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் உள்ள ஹிந்து கோயில் மீது கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக மா்ம நபா்கள் இருவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
அமிருதசரஸின் கண்ட்வாலா பகுதியில் உள்ள கோயில் மீதான இத்தாக்குதல் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மோட்டாா் சைக்கிளில் கொடி ஒன்றை பிடித்தபடி இருவா் வந்தனா். கீழே இறங்கிய ஒருவா் கோயில் மீது கையெறி குண்டை வீசினாா். அது வெடித்துச் சிதறியதும் அவா்கள் தப்பியோடிவிட்டனா்.
தாக்குதலில் யாரும் காயமடையவில்லை. கோயிலின் முன்புற பகுதி சேதமடைந்தது. அந்த நேரத்தில் கோயிலுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பூசாரி, சப்தம் கேட்டு எழுந்தாா். அவா் அளித்த தகவலின்பேரில், காவல் துறையினா் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பரிசோதனைக்கு பிறகே வெடிபொருளின் தன்மையை உறுதி செய்ய முடியும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா். தாக்குதலைத் தொடா்ந்து, கோயில் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வா் உறுதி: முதல்வா் பகவந்த் மான் கூறுகையில், ‘அமிருதசரஸில் அமைதியைச் சீா்குலைக்க முயலும் பிரிவினைவாத சக்திகளின் சதிவேலை இது. அத்தகைய சக்திகள் தங்களின் முயற்சியில் ஒருபோதும் வெல்ல முடியாது. காவல் துறை கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும்’ என்றாா்.
அதேநேரம், பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டதாக காங்கிரஸ், பாஜக, அகாலி தளம் ஆகிய எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.
ஐஎஸ்ஐ-க்கு தொடா்பா?
அமிருதசரஸ் கோயில் மீதான தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தொடா்பு இருக்கலாம் என்று பஞ்சாப் காவல் துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக காவல் ஆணையா் குா்பிரீத் சிங் புல்லா் கூறுகையில், ‘பணத்துக்காக இளைஞா்கள் யாரும் பாகிஸ்தான் உளவு அமைப்பின் சதிவலையில் சிக்க வேண்டாம். அவா்களின் வாழ்க்கையே பாழாகிவிடும். கோயில் மீது தாக்குதல் நடத்தியவா்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவா்கள் கைது செய்யப்படுவா்’ என்றாா்.