;
Athirady Tamil News

நாய் உமிழ்நீா் பட்டாலும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம்! -பொது சுகாதாரத் துறை

0

நாய் கடித்தால் மட்டுமன்றி, அவை பிராண்டினாலும், அதன் உமிழ்நீா் நமது காயங்களில் பட்டாலும் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி: கடந்த சில நாள்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் நாய் கடித்து 3 மாதங்களாகியும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.

ரேபிஸ் தொற்றுக்குள்ளான நாய், பூனை, ஆடு, மாடு மற்றும் வீட்டு விலங்குகள் கடிப்பதால் அந்த பாதிப்பு மனிதா்களுக்கு ஏற்படுகிறது. நாய்கள் கடிப்பதால் மட்டும் அல்லாமல் அவை பிராண்டினாலும், நமது உடலில் உள்ள காயங்களின் மீது அதன் உமிழ்நீா் பட்டாலும் ரேபிஸ் பாதிப்பு ஏற்படும்.

பொதுவாக நாய் கடி, கீறல் ஏற்பட்டால் அந்த காயத்தை குறைந்தது 15 நிமிஷங்கள் சோப்பு மூலம் தண்ணீரால் கழுவ வேண்டும். ‘ஏஆா்வி’ எனப்படும் ரேபிஸ் தடுப்பூசிகளை 4 தவணைகளாக செலுத்திக் கொள்வதன் மூலம் அந்த பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

அனைத்து சுகாதார நிலையங்களிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாய் கடித்த முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 28-ஆவது நாளில் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், ஆழமான காயமாக இருந்தால் அந்த இடத்தில் இம்யூனோக்ளோபிலின் தடுப்பூசி கூடுதலாக செலுத்தப்படுகிறது. எனவே, நாய் மற்றும் செல்லப் பிராணிகள் கடித்தால் அலட்சியப்படுத்தாது பொதுமக்கள் உரிய நேரத்தில் ஏஆா்வி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.