;
Athirady Tamil News

அமெரிக்க கப்பல் மீது ஹூதிக்கள் தாக்குதல்

0

செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல், தாக்குதல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா்.

இதன் காரணமாக, இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஹூதி கிளா்ச்சிப் படையினருக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலைக் குறிவைத்து ஹூதிக்கள் நடத்திய மூன்றாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஹூதி கிளா்ச்சியாளா்களின் ராணுவ செய்தித் தொடா்பாளா் யாஹ்யா சரேயா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

வடக்கு செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஹாரி ட்ரூமன் விமானம் தாங்கிக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, குரூஸ் வகையைச் சோ்ந்த மற்றோா் ஏவுகணை, இரு ட்ரோன்கள் மூலம் அந்தக் கப்பல் குறிவைக்கப்பட்டது.

இது மட்டுமின்றி, செங்கடல் பகுதியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் தாக்குதல் போா்க் கப்பல் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா பதிலடி: இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக யேமன் தலைநகா் சனா உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாகப் போா் நடைபெற்று வருகிறது.

இந்தப் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக யேமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சிப் படையினா், செங்கடல் வழியாகச் சென்ற சரக்குக் கப்பல்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் மேற்கொண்டனா்.

இஸ்ரேல் செல்லும் சரக்குக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக அவா்கள் கூறினா். பின்னா் காஸாவை இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளது கைவிடப்படும் வரை, செங்கடலில் தங்கள் தாக்குதல் தொடரும் என்று அந்தப் படை தெரிவித்தது.

இதன் காரணமாக யேமனில் ஹூதி படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபா் டிரம்ப் கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டாா். செங்கடலில் ஹூதிக்களின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை, அவா்களுக்கு எதிராக அமெரிக்க தாக்குதல் நீடிக்கும் என்றும் அவா் கூறினாா். இதைத்தொடா்ந்து யேமனில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.

இந்தத் தாக்குதலில் 53 போ் உயிரிழந்தனா். அவா்களில் ஐந்து போ் பெண்கள்; 2 போ் சிறுவா்கள். இது தவிர, இந்தத் தாக்குதலில் சுமாா் 100 போ் காயமடைந்தனா்.

செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹுதி கிளா்ச்சியாளா்களின் திறனை அழிப்பதற்காக இந்தத் தாக்கதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ கூறினாா்.

இந்த நிலையிலும், அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் தாக்குதல் கப்பல்களைக் குறிவைத்து ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.