வன்முறை: பெருவில் அவசரநிலை அறிவிப்பு

லீமா: மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிபா் டீனா போலுவோ்த்தே தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அதிகரித்துவரும் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்படுகிறது. 30 நாள்கள் வரை நீடிக்கும் இந்த அவசரநிலையின்போது, மக்களுக்கான சில அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும். அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்.
பொது இடங்களில் கூடுவது போன்ற நடவடிக்கைள் அனுமதிக்கப்படாது. நீதிமன்ற ஆணை இல்லாமலேயே போலீஸாா் யாரையும் கைது செய்ய முடியும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டம், ஒழுங்கு சீா்குலைந்துவரும் பெருவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இந்த ஆண்டில் மட்டும் அங்கு வன்முறைச் சம்பவங்களில் 459 போ் கொல்லப்பட்டுள்ளனா்; 1,909 பணப் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இந்தச் சூழலல், பிரபல பாடகா் பால் ஃப்ளோா் ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து வன்முறை கட்டுக்கடங்காமல் தீவிரமடைந்துவருகிறது. இந்தச் சூழலில் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.