;
Athirady Tamil News

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: ஒருவர் பலி; பலர் படுகாயம்!

0

மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்ததில் செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூரின் புறநகர்ப் பகுதியில் ஹமர் மற்றும் சோமி பழங்குடியினரிடையே செவ்வாய்க்கிழமை இரவு கலவரம் ஏற்பட்டுள்ளது.

சோமி பிரிவினர் தங்கள் சமூகக் கொடியை ஏற்றியதற்கு ஹமர் சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வெடித்த கலவரத்தில் லால்ரோபுய் பகுமதே (வயது 53) என்பவர் கொல்லப்பட்டார்.

கலவரப் பகுதிக்கு வந்த பாதுகாப்புப் படையினர் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்திய நிலையில், போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலவரத்தை பாதுகாப்புப் படையினர் கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலில், போராட்டக்காரர்கள் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால் பலர் காயமடைந்ததாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜென்ஹாங்கில் ஹமர் அமைப்பின் பொதுச் செயலாளர் ரிச்சர்ட் ஹமர் வாகனத்தின் சென்றபோது, ஜோமி சமூகத்தைச் சேர்ந்தவரின் இரு சக்கரத்தை மோதியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், ரிச்சர்ட்டை தாக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பெர்சாவல் மற்றும் ஜிரிபாம் மாவட்டங்களில் குழுக்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஹமர் – ஜோமி சமூகத்தினரிடையே செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் சமாதானம் எட்டப்பட்டது.

ஆனால், இந்த பேச்சுவார்த்தை முடிந்த சில மணிநேரங்களில் இரு சமூகத்தினரிடையே மீண்டும் வன்முறை வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த மே 2023 முதல் நடைபெறும் வன்முறையில் இதுவரை 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்ததை தொடர்ந்து, பிப்ரவரி 13 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.