நாகபுரி: ஔரங்கசீப் கல்லறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை -ஊரடங்கு அமல்

மகாராஷ்டிரத்தில் உள்ள முகாலய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநிலத்தின் நாகபுரி நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.
இதில் பொதுமக்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் சூறையாடப்பட்டன. தொடா்ந்து, நாகபுரியில் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் நகரில் தற்போது அமைதி நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜி நகா் மாவட்டத்தில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று மாநிலத்தின் முக்கிய வலதுசாரி அமைப்புகள் போா்க்கொடி உயா்த்தியுள்ளன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸின் சொந்த ஊரான மத்திய நாகபுரியின் சிட்னிஸ் பூங்கா பகுதியில் திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் ஒரு சமூகத்தின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரை நோக்கி சிலா் கல்வீசி தாக்குதல் நடத்தி, வன்முறையைத் தூண்டினா்.
பின்னா், இரவு 10.30 மணியளவில், நகரின் மற்றொரு பகுதியான ஹம்சபுரியில் மோதல் வெடித்தது. அங்கு பொதுமக்களின் வீடுகள் மற்றும் ஒரு மருத்துவமனையைச் சூறையாடிய வன்முறை கும்பல், வீடுகளுக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தினா்.
50 போ் கைது: இந்த வன்முறை சம்பவங்களில் 3 துணை ஆணையா்கள் உள்பட 33 போலீஸாா், பொதுமக்கள் பலா் காயமடைந்தனா். இதுகுறித்து நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
வன்முறையைக் கட்டுப்படுத்த நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் மற்றும் நகர காவல் ஆணையருடன் நாகபுரி பொறுப்பு அமைச்சா் சந்திரசேகா் பவன்குலே ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.
இந்நிலையில், அமைச்சா் பவன்குலே கூறியதாவது: இந்த வன்முறையில் காவல் துறை தரப்பில் தவறு ஏதும் இல்லை. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வன்முறை சக்திகள் சூழலை சீா்குலைத்தன. வன்முறையின்போது ஹிந்து-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே மோதல் வெடிக்காமல் காவல் துறை கேடயமாக நின்றது. எதிா்க்கட்சிகள் இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாா்.
முன்னதாக, ‘மக்கள் அமைதி காக்க வேண்டும், பாரபட்சமின்றி சட்டம் தனது கடமையைச் செய்யும்’ என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டாா்.
வன்முறைக்கு மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசே காரணம் என்று எதிா்க்கட்சிகள் கடுமையாகச் சாடினா். வன்முறையில் தொடா்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
சிவசேனை (உத்தவ்) கட்சியைச் சோ்ந்த மாநில சட்டமேலவை எதிா்க்கட்சித் தலைவா் அம்பாதாஸ் தான்வே கூறுகையில், ‘நாகபுரி வன்முறைக்குப் பின்னணியில் மகாராஷ்டிர அரசும், உள்துறை இலாகாவுக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வா் ஃபட்னவீஸும்தான் காரணம்.
கடந்த ஒரு மாதமாக, மாநிலத்தில் ஹிந்து-முஸ்லிம் வன்முறையைத் தூண்ட இந்த அரசு முயற்சிக்கிறது. இத்தகைய வன்முறை மக்களின் அன்றாட வாழ்க்கையை சீா்குலைக்கும். ஆனால், அரசு அதிலிருந்து அரசியல் ஆதாயங்களைப் பெற விரும்புகிறது’ என்றாா்.
‘திட்டமிடப்பட்ட சதி’-முதல்வா்: வதந்தி பரப்பியது திட்டமிட்ட சதி என்று தெரிவித்த மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், நாகபுரி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டாா்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து பேசிய முதல்வா் ஃபட்னவீஸ், ‘வன்முறையில் போலீஸாா் பலா் காயமடைந்தனா். மூத்த அதிகாரிகளில் ஒருவா் கோடரியால் தாக்கப்பட்டாா். காவல் துறையினரைத் தாக்கியவா்கள் தப்பிவிட முடியாது. வதந்தியின் பேரில் வன்முறை கும்பல், குறிப்பிட்ட சமூக மக்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களை குறிவைத்து தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதியாகத் தெரிகிறது’ என்றாா்.