யாழ். யூடியூப்பாருக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பரின் விளக்கமறியலை மல்லாகம் நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது.
யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று ,அதன் ஊடாக உதவி செய்வது போன்றன காணொளிகளை தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வந்துள்ளார்.
தேவை தேவைப்படுவோரிடம் நக்கல் , நையாண்டியோடு பேசியே காணொளி எடுத்து பதிவிட்டு வருபவர். அதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பி வந்தன.
இந்நிலையில் , கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் பாடசாலை மாணவியொருவரின் இரவு வேளை சென்ற குறித்த நபர் , பாடசாலை மாணவியை காணொளி எடுக்க முற்பட்டுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே ,காணொளியில் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து பல்வேறு தரப்பினரும் , தமது கண்டனங்களை தெரிவித்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , இவ்வாறு உதவி செய்பவர்களின் நிதி கையாடுகைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி வந்தனர்.
இந்நிலையில் குறித்த காணொளியில் காணப்பட்ட குடும்பத்தினர் பண்டத்தரிப்பு பகுதியில் வசித்து வரும் ,நிலையில் அவர்களுடன் சமரசம் பேச சென்ற சமயம் , அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் , பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் யூடியூப்பரை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் , கடந்த 10ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுருந்தது.
அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, யூடியூபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்த போதிலும் , பிணை விண்ணப்பத்தை நிராகரித்த மன்று அவரை எதிர்வரும் 02 (ஏப்ரல் 02) ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது