படகு விபத்தில் 6 அகதிகள் பலி! 40 பேர் மாயம்!

மத்திய தரைக்கடலில் படகு விபத்தில் பலியான 6 அகதிகளின் உடல்களை இத்தாலி நாட்டின் கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
துனிசியா நாட்டின் எஸ்ஃபாக்ஸ் துறைமுகத்திலிருந்து 56 அகதிகள் ரப்பர் படகில் கடந்த மார்ச்.17 அன்று பயணம் மேற்கொண்டிருந்தனர். பயணம் துவங்கிய சில மணி நேரங்களில் அந்த படகில் ஓட்டை விழுந்து காற்று வெளியேறத் துவங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நடுக்கடலில் தத்தளித்த 4 பெண்கள் உள்பட 10 பேர் மீட்கப்பட்டு இத்தாலின் தெற்கு பகுதியிலுள்ள லான்பெதூஸா தீவிற்கு அழைத்து வரப்பட்டு ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையத்தின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாயமான 46 அகதிகளில் 6 பேரது உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 பேரது நிலைக்குறித்து எந்தவொரு தகவலும் தெரியவராத சூழலில் அவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய 56 அகதிகளும் கேமரூன், ஐவரி கோஸ்ட், கினியா மற்றும் மாலி போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும், துனிசியாவின் எஸ்ஃபாக்ஸ் துறைமுகத்திலிருந்து உலோகப் படகுகளில் பயணம் மேற்கொண்ட மற்றொரு அகதிகள் குழு லான்பெதூஸா தீவில் தரையிறங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் மத்திய தரைக்கடலில் மாயமான மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 24,506 ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா.வின் மாயமான புலம்பெயர்ந்தோருக்கான திட்டம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.