பாக்-ஆப்கன் எல்லை மீண்டும் திறப்பு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் டோர்காம் எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளைக் கடக்கும் முக்கிய பாதையான டோர்காம் எல்லையின் அருகில் ஆப்கான் படைகள் கடந்த பிப்.21 அன்று ராணுவ சோதனை சாவடியை நிறுவ முயற்சி செய்தனர்.
இதற்கு, பாகிஸ்தான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த எல்லையானது அன்று முதல் மூடப்பட்டு அவ்வழியான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, டோர்காம் எல்லையை மீண்டும் திறப்பது குறித்து கடந்த மார்ச்.4 அன்று இருதரப்பினரும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. மேலும், இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒரு தலிபான் எல்லைக் காவலர் பலியானார்.
இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர அப்பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த மார்ச்.9 அன்று பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையை திறப்பது குறித்து வகுக்கப்பட்ட நெறிமுறைகளை கடுமையான கடைபிடிக்கப்படும் என இருதரப்பாலும் உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (மார்ச் 19) அந்த எல்லையில் நடைபெற்ற கொடி கூட்டத்தில் இரு நாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய வர்த்தக பாதையைத் திறப்பதற்கான முடிவு அறிவிக்கப்பட்டது.
இதனால், சுமார் 25 நாள்கள் கழித்து பாகிஸ்தான் நேரப்படி மதியம் 1 மணிக்கு டோர்காம் எல்லை திறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டோர்காம் எல்லை இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய வர்த்தக பாதையாகும். இந்த பாதையின் வழியாக நாளொன்றுக்கு சுமார் 3 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான வர்த்தகம் நடைபெறுவதுடன் இந்த பாதையின் வழியாக நாள்தோறும் 10,000 பேர் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.