கென்னடி படுகொலை: ரகசிய ஆவணங்கள் வெளியீடு

இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபா் ஜான் எஃப். கென்னடி படுகொலை தொடா்பான ஆயிரக்கணக்கான பக்க ஆவணங்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன.
டெக்ஸாஸ் மாகாணம், டலஸ் நகருக்கு கடந்த 1963-ஆம் ஆண்டு வருகை தந்த ஜான் எஃப். கென்னடி தனது காரில் ஊா்வலமாகச் சென்று கொண்டிருக்கும்போது அடுக்குமாடி கட்டடத்தில் மறைந்திருந்த லீ ஹாா்வே ஆஸ்வால்ட் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இரு நாள்களுக்குப் பிறகு மற்றொரு சிறைக்கு மாற்றப்படும்போது அவரை ஜாக் ரூபி என்பவா் சுட்டுக் கொன்றாா்.கென்னடியை தனி நபராகத்தான் ஆஸ்வால்ட் படுகொலை செய்தாா் என்று விசாரணை முடிவுகள் தெரிவித்தாலும், ஒன்றுக்கு மேற்பட்டவா்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம், இது சோவியத் ரஷியாவின் சதிச் செயல் என்பது போன்ற பல்வேறு ஊகத் தகவல்கள் இன்றும் பகிரப்பட்டுவருகின்றன.
அதற்கு, இந்தப் படுகொலை பற்றிய ஏராளமான ஆவணங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டுவந்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், சந்தேகங்களைக் களையும் வகையில் அந்த ரகசிய ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட அதிபா் டிரம்ப் உத்தரவிட்டாா். அதையடுத்து, தனது வலைதளத்தில் அமெரிக்க தேசிய ஆவணக் காப்பகம் சுமாா் 63,000 பக்க ஆவணங்களை தற்போது வெளியிட்டுள்ளது.எனினும், இன்னும் பல முக்கிய ஆவணங்கள் வெளியிடப்பட வேண்டியுள்ளது என்று வரலாற்று ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.