இந்தியாவிற்கு வர உள்ள சுனிதா வில்லியம்ஸ் – உறவினர் சொன்ன தகவல்

சுனிதா வில்லியம்ஸ், விரைவில் இந்தியா வர இருப்பதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ்(sunita williams) மற்றும் பேரி வில்மோர்(barry wilmore), 8 நாள் பயணமாக கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.
விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 9 மாதங்கள் விண்வெளியில் சிக்கியிருந்த இருவரும், ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் நேற்று பத்திரமாக பூமிக்கு அழைத்து வரப்பட்டனர்.
நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்ததால், அவர்களின் எலும்புகள் மற்றும் தசைநார்கள் பலவீனம் அடைந்தது பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டிருக்கும்.
இதனால், அவர்களுக்கு மறுவாழ்வு மையத்தில் 45 நாட்கள் தீவிர பயிற்சி அளிக்கப்பட உள்ளது. குறைந்தது 3 மாதங்கள் கழித்தே இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியதை அவர்களின் பூர்வீக ஊரான, குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் ஜூலாசன் கிராம மக்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்தியாவிற்கு வரும் சுனிதா வில்லியம்ஸ்
அங்குள்ள அவரது உறவினரான ஃபால்குனி பாண்டியா(falguni pandya), விரைவில் சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வர உள்ளார் என தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்தினர் விடுமுறையில் இங்கு வர திட்டமிட்டுள்ளனர். குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிடப் போகிறோம்.
எந்த திகதியில் வருவார்கள் என்ற தகவல் இல்லை. ஆனால் இந்த வருட இறுதிக்குள் இந்தியா வருவார்கள் என நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.
நரம்பியல் மருத்துவரான சுனிதா வில்லியம்ஸின் தந்தை தீபக் பாண்டியா(Deepak Pandya), குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜூலாசன் கிராமத்தில் பிறந்தவர் ஆவார்.
1957 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இவர், அங்கு அமெரிக்காவை சேர்ந்த உர்சுலின் போனி(Ursuline Bonnie Zalokar,) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.