யானைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட வரை மீட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்(திகிலூட்டும் வீடியோ)

காட்டு யானைகளின் ஆக்கிரமிப்பினால் வயல் வெளியில் காவல் நின்றவர் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை(18) மாலை இடம்பெற்றது.
சுமார் 50 க்கும் அதிகமான யானைகள் வயல் அறுவடையின் பின்னர் மேற்குறிப்பிட்ட மாவடிப்பள்ளி பகுதியில் உட்புகுந்து அங்கு புதிதாக முளைத்துள்ள புற்களை உண்டு வருவதுடன் சட்டவிரோதமான குப்பைக்கூளங்களும் நாடி வயல் வெளிகளில் நடமாடிக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில் சம்பவ தினம் மாலை அறுவடை செய்யப்பட்ட வயல்வெளியில் மாடுகளை மேய்ப்பதற்காக காவலுக்கு சென்ற நபரை திடிரென அங்கு சென்ற யானைகள் சுற்றி வளைத்ததுடன் குறித்த நபரை தாக்க முயன்றுள்ளன.
உடனடியாக செயற்பட்ட அந்நபர் அருகில் உள்ள உயரமான இடமொன்றில் ஏறியுள்ளார்.எனினும் குறித்த நபரை விடாது துரத்திய யானைகள் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டன.இதே வேளை தகவலை அறிந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து வெடி பொருட்களை பாவித்து யானைக் கூட்டத்தை பின்வாங்க செய்ததுடன் யானை தாக்குதல் ஆபத்தில் இருந்த நபரையும் மீட்டுள்ளனர்.
தற்போது இப்பகுதியில் சுமார் 200 க்கும் அதிகமான யானைகள் பட்டி பட்டியாக வருகை தருவதுடன் பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றன.அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் கூட்டமாக ஊடுருவும் யானைகள் காய்க்கும் தென்னை மரங்கள் உட்பட பயன் தரும் மரங்கள் வீட்டுத் தோட்டங்கள், குடியிருப்புகள், வேலிகள் என்பவற்றை துவம்சம் செய்து வருகிறது.
பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்தழிவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், நூற்றுக்கணக்கான காய்க்கும் தென்னை மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இப்பிரதேசத்தில் யானை, மனித மோதலை கட்டுப்படுத்தி சொத்தழிவு, உயிரிழப்புக்களை தவிர்க்கும் நோக்கில் இதற்கான நிரந்தர தீர்வு ஒன்றை பெற்று தருமாறு பொதுமக்கள் கேட்டுள்ளனர்.
இதே வேளை அம்பாரை மாவட்டம் சாய்ந்தமருது கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் கீழ் உள்ள குடாக்கள்ளி மேற்கு கண்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 15 ஏக்கர் வேளாண்மைகளை காட்டு யானைகள் நாசமாகியுள்ளன.