ஈரான்: 149 ஆப்கன் சிறைக் கைதிகள் தலிபான் அரசிடம் ஒப்படைப்பு!

ஈரான் நாட்டு சிறைகளிலிருந்து 149 ஆப்கன் கைதிகள் தலிபான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஈரானில் ஆப்கான் அகதிகள் தொடர்ந்து கடுமையான சவால்களை சந்தித்து வரும் சூழலில், அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 149 பேர் தலிபான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரானின் நீதித்துறை அமைச்சர் அஸ்கர் ஜலாலியன் கூறுகையில், இடமாற்றப்பட்டுள்ள 149 ஆப்கன் சிறைக் கைதிகளும் தங்களது மீதமுள்ள தண்டனைக் காலத்தை ஆப்கானிஸ்தானில் கழிப்பார்கள் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், சிறைக் கைதிகள் வலுக்கட்டாயமாக இடமாற்றப்பட்டதைப் பற்றி தலிபான் அரசு எந்தவொரு கருத்தும் தெரிவிக்காத சூழலில் அந்த கைதிகள் அனைவரும் அவர்களது கட்டுப்பாட்டில் தண்டனையை அனுபவிப்பார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை.
முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஈரானில் 80 ஆப்கான் சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானின் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானில் தஞ்சம் புகுந்த ஆப்கானிஸ்தான் அகதிகள் பெரும்பாலும் பல்வேறு வகையான வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாகவும் அந்நாட்டு அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளினால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த வாரம் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம், வருகின்ற மார்ச்.21 முதல் உரிய ஆவணங்களின்றி அந்நாட்டில் தங்கியுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டினருக்கு வழங்கப்படும் மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டினருக்கு எதிரான வன்முறை ஈரானில் அதிகரித்து வரும் நிலையில் ஈரான் மக்களால் அவர்கள் தாக்கப்படுவது போன்ற விடியோக்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.