அமெரிக்காவிற்கு பயணம்… பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளும் குடிமக்களுக்கான எச்சரிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் சமீபத்திய வாரங்களில் மீண்டும் திருத்தியுள்ளது.
கடுமையான நடவடிக்கை
அமெரிக்க அரசாங்கத்தின் நுழைவு விதிகளை மீறும் எவரும் கைது அல்லது தடுப்புக்காவலை எதிர்கொள்ள நேரிடும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்றதிலிருந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடுமையான எல்லைக் கொள்கையில் கவனம் செலுத்தும் குடியேற்றம் தொடர்பான பல நிர்வாக ஆணைகளை அறிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்காவில் ஆவணமற்ற குடியேறிகள் மீதான கடுமையான நடவடிக்கை மற்றும் விசா சரிபார்ப்பு நடைமுறைகளையும் தீவிரப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அமெரிக்க எல்லையில் பல ஜேர்மன் மக்கள் தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து,
விசா அல்லது நுழைவு விலக்கு என்பது அந்த நாட்டுக்கான நுழைவுக்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை வலியுறுத்தும் வகையில் புதன்கிழமை ஜேர்மனி தனது அமெரிக்க பயண எச்சரிக்கைகளை புதுப்பித்தது.
இந்த நிலையில் தற்போது பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரகமும் அமெரிக்கா தொடர்பில் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய மக்கள் அனைத்து நுழைவு, விசா மற்றும் பிற நுழைவு நிபந்தனைகளுக்கும் இணங்க வேண்டும் என்றும்,
முடிவுகளை எடுக்க உதவும் வகையில்
அமெரிக்க அதிகாரிகள் நுழைவு விதிகளை கண்டிப்புடன் அமுல்படுத்துகிறார்கள் எனவும், இதனால் பிரித்தானிய மக்கள் விதிகளை மீறினால் கைது செய்யப்படலாம் அல்லது காவலில் வைக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தத் திருத்தத்திற்கான காரணம் குறித்து கருத்து தெரிவிக்கவோ அல்லது அது எப்போது முதல் நடைமுறைக்கு வந்தது என்பதை உறுதிப்படுத்தவோ வெளிவிவகார அலுவலகம் மறுத்துவிட்டது.
மட்டுமின்றி, பயணம் மேற்கொள்ளும் மக்கள் முடிவுகளை எடுக்க உதவும் வகையில் தங்கள் ஆலோசனைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதையும் வெளிவிவகார அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், பெண் ஒருவர் தனது விசா நிபந்தனைகளை மீறியதாக எல்லையில் 10 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, அவரை மீட்க உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக வெளிவிவகார அலுவலகம் உறுதி அளித்துள்ளது.