கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (21.03.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபடும் திணைக்களத்துடன் இணைந்த வகையில் கமநலசேவைகள் திணைக்களம் நீர்ப்பாசனத் திணைக்களம் போன்ற ஏனைய தொடர்புடைய திணைக்களங்களின் ஆலோசனைகளையும் பெற்று ஒருங்கிணைந்த வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினை தான் நேரடியாக ஆய்வு செய்த போது பொதுமக்கள் பல கருத்துக்களை முன்வைத்தார்கள் எனவும், குறிப்பாக வெள்ளம் தரித்த இடத்தில் மதகு அமைத்திருந்தால் வெள்ளம் தரித்து நிற்காது என பல பெறுமதியான கருத்துக்களை முன்வைத்தார்கள் எனவும் குறிப்பிட்டதுடன், இதன் மூலம் வீதிப் புனரமைப்பிற்கு சிறந்த பொறிமுறையின் அவசியம் கட்டாயம் தேவை எனவும், ஆதலால் அனைவரினதும் ஆலோசனைகளை கூட்டுப் பொறுப்புடன் இனி வருங்காலங்களில் வீதி புனரமைப்பு வேலைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், அரசாங்கமானது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வடமாகாணத்தின் வீதிகளைப் புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தின் வீதிகளையும் புனரமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீதி புனரமைப்பு திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற வேண்டிய வீதிகளை இனங்காண்பதே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டதுடன், பிரதேச செயலாளர்கள் புனரமைக்கப்பட வேண்டிய அனைத்துத் தர வீதிகளின் விபரங்களை வீதிகளுக்குரிய வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்த வகையில் சரியான முறையில் தயாரித்து வைக்குமாறும் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக முன்னுரிமை அடிப்படையில் புனரமைப்பு செய்ய வேண்டிய வீதிகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் நிகழ்நிலையூடாக (Zoom) வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளரும், நேரடியாக திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், உள்ளிட்ட தொடர்புடைய திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.