மணிப்பூர் நிவாரண முகாமில் சிறுமி பலி!

மணிப்பூரில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமி பலியானதைத் தொடர்ந்து அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மணிப்பூர் சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமில் குடும்பத்துடன் தங்கியிருந்த சிறுமி நேற்று மாலை முதல் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
குடும்பத்தினர் அவரைத் அங்குள்ள பகுதிகளில் தேடி வந்தனர். பின்னர் நள்ளிரவில் நிவாரண முகாம் வளாகத்திலேயே அந்தச் சிறுமி சடலமாக கிடந்தார்.
சிறுமியின் உடல் முழுக்க காயங்கள் இருந்துள்ளன. அவரது கழுத்துப் பகுதியில் துணியால் இறுக்கப்பட்டது போன்ற காயம் ஏற்பட்டிருந்தது. மேலும், உடலில் ரத்தக் கறைகளும் காணப்பட்டன.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அதிகாரிகள் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சிறுமி கொலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.