;
Athirady Tamil News

வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மணிவண்ணன்

0

மக்களை காப்பாற்றுவதற்காக போடப்பட்ட சட்டத்தினைக் கொண்டே தமக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டுள்ளது என யாழ் மாநகர சபையின் முன்னாள் மேஜரும் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினருமான சட்டத்தரணி மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ் மாநகர சபைக்கான தமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ” நாங்கள் பல்வேறு சபைகளுக்கான வேட்பு மனுக்களை தமிழ் மக்கள் கூட்டணி சார்பாக சமர்ப்பித்திருந்தோம். குறித்த வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளப்பட்டனவா இல்லையா என அறிவிக்கப்பட்டபொழுது, யாழ் மாவட்டத்தின் 03 சபைகளுக்கான எமது வேட்புமனுக்களும் கிளிநொச்சி மாவட்டத்துக்கான கரைச்சிப் பிரதேச சபைக்கான வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றுள் யாழ் மாநகர சபைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு சொல்லப்பட்ட காரணம், 2023ம் ஆண்டு 31ம் இலக்க உபபிரிவு 03 தேர்தல் சட்ட ஏற்பாட்டின் படி, எமது வேட்புமனுவோடு இணைக்கப்பட்ட ஒரு பெண் வேட்பாளரின் உறுதியுரையில், சத்தியப்பிரமாண ஆணையாளர் கையொப்பமிடவில்லை என்ற காரணத்தினால் குறித்த உறுதியுரை நிராகரிக்கப்பட்டமையின் அடிப்படையில் எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

மேலும் வலி தெற்கு உடுவில் பிரதேச சபைக்கான வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இளம் வேட்பாளர்களை உறுதிப்படுத்தும் வகையில் வழங்கப்பட பிறப்புச்சான்றிதழ் முறையாக உறுதிப்படுத்தப்படவில்லை என காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. அதே காரணத்துடன் பருத்தித்துறை மற்றும் கரைச்சி பிரதேச சபைக்கான வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், யாழ் மாநகரசபையின் போட்டியிடுகின்ற ஒரு முக்கிய தரப்பு நாம். கடைசியாக இரண்டு ஆண்டுகள் எமது தரப்பு யாழ் மாநகரசபையை ஆட்சி செய்தது. இம்முறையும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தரப்பாக நாம் இருக்கிறோம்.
வெல்வதற்கான வாய்ப்புகளுடனும் நம்பிக்கையுடனும் தாக்கல் செய்யப்பட்ட யாழ் மாநகரசபைகான் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் வேட்பாளரால் சமர்ப்பிக்கப்பட்ட சாத்தியப்பிரமணத்திலே, உறுதிப்படுத்தி ஒரு சாத்தியப்பிரமான ஆணையாளர் கையொப்பமிடவில்லை. எனினும் அவர் தனது பதவி முத்திரையை அதில் பதிந்திருக்கிறார். இதன் காரணமாக மொத்தப் பட்டியலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான நல்லூர் பிரதேச சபைக்கான வேட்பு மனுவில் ஒரு வேட்பாளர் நிராகரிக்கப்பட்ட போதும், தமிழரசுக் கட்சிக்கான நல்லூர் பிரதேச சபைக்கான வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் கவலைக்குரிய விடயம், 2023ம் ஆண்டு திருத்தப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தில் 31 உப பிரிவு 03 சொல்கிறது ‘ஒருவர் கையொப்பமிடவில்லையெனில் நிராகரிக்கப்பட முடியாது’ என சொல்கிறது.

நிராகரிக்கப்பட முடியாது என சொல்லப்பட்ட சட்டத்தை வைத்து எனது வேட்புமனுவை நிராகரித்துள்ளார்கள். மேலும் குறித்த சட்டத்தில் 31 உப பிரிவு 01 எப்பொழுது வேட்புமனு நிராகரிக்கப்படலாம் என சொல்கிறது.

அதன்படி குறித்த சட்டப்பகுதியின் பி பிரிவில் ‘ மொத்த எண்ணிக்கையை கொண்ட வேட்பாளர்கள் வழங்கப்படாதவிடத்து குறித்த வேட்புமனு நிராகரிக்கப்படலாம்’.
குறித்த சட்டப்பகுதியின் எப் பிரிவில் ‘ சட்டத்தாலே தேவைப்படுத்தப்பட்ட பெண்களையோ இளைஞர்களையோ / யுவதிகளையோ உள்ளடக்காது விட்டால் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்’ என சொல்லப்பட்டிருக்கிறது. வேட்புமனுப் பத்திரத்தின்படி எமது சமர்ப்பிப்பு சரியாக உள்ளது.

31 உப பிரிவு 03ன் படி சாத்தியக்கடதாசி கையொப்பமிடப்படவில்லை எனில் குறித்த வேட்புமனு நிராகரிக்கப்படக்கூடாது என சொல்லப்பட்ட நிலையிலும் அதே சட்டத்தை வைத்து எமது வேட்புமனுவை நிராகரித்துள்ளார்கள். இது இலங்கை சட்டம் ஒழுங்கில் இருக்கக்கூடிய மிகப்பெரும் அபத்தம்.
குறித்த சட்டமீறலை எதிர்த்து நாம் நிச்சயமாக வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர். “கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் என நாடு முழுவதும் 250 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எம்மை பொறுத்தவரையில் ஒரே காரணத்தின் அடிப்படையிலேயே 09 நிராகரிக்கப்பட்டுள்ளதாக எழுத்து மூல ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளன.

இளம் வேட்பாளர்களை உறுதிப்படுத்தும் வகையிலான அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படாமையே நிராகரிப்புக்கான காரணமாக சொல்லப்பட்டுள்ளது.
ஆயினும் நாங்கள் சகல சபைகளிலும் தேவையான இளைஞர்களுக்கான அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச்சான்றிதழ்கள் வழங்கியிருக்கிறோம்.

உரிய இடத்தில் உரிய உறுதிப்படுத்தல்களுடன் பெற்றுக்கொண்ட பிறப்பு சான்றிதழ்களுக்கான போட்டோ பிரதிகள் சமாதான நீதவானின் உறுதிப்படுத்தல்களுடன் வழங்கப்பட்டுள்ளன.
மூலப்பிரதிகள் வழங்கப்பட வேண்டும் என எங்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கவில்லை.
எம்மை பொறுத்தவரையில் அவை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
சட்டத்தின் நோக்கம் குறித்த நபர்கள் இளைஞர்கள் என்பதை உறுதிப்படுத்துவதே ஆகும். இந்த விடயத்தை உறுதிப்படுத்த பிறப்பு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை பிரதி வழங்குகிறோம்.
இவற்றை வைத்து குறித்த நபர் இளைஞரா இல்லையா என முடிவு செய்ய முடியும். இந்த நிலையில் குறித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தவறான ஒன்று.

இது தொடர்பாக நாம் ஏற்கனவே சட்டத்தரணியுடன் பேசியிருக்கிறோம். எதிர்வரும் திங்கட்கிழமை இது குறித்த வழக்கு தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை பிறப்பு சான்றிதழை உறுதிபடுத்தும் விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக வல்வெட்டித்துறையில் சுயேட்சைக் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதி எனவும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் குறித்த சுயேட்சைக் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.