வேட்பு மனு நிராகரிப்பு – இலங்கை சட்டம் ஒழுங்கில் இருக்கக்கூடிய மிகப்பெரும் அபத்தம்

நிராகரிக்கப்பட முடியாது என சொல்லப்பட்ட சட்டத்தை வைத்து எமது வேட்புமனுவை நிராகரித்துள்ளார்கள். இது இலங்கை சட்டம் ஒழுங்கில் இருக்கக்கூடிய மிகப்பெரும் அபத்தம் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகர சபைக்கான தமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் பல்வேறு சபைகளுக்கான வேட்பு மனுக்களை தமிழ் மக்கள் கூட்டணி சார்பாக சமர்ப்பித்திருந்தோம். குறித்த வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளப்பட்டனவா இல்லையா என அறிவிக்கப்பட்டபொழுது, யாழ் மாவட்டத்தின் 03 சபைகளுக்கான எமது வேட்புமனுக்களும் கிளிநொச்சி மாவட்டத்துக்கான கரைச்சிப் பிரதேச சபைக்கான வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றுள் யாழ் மாநகர சபைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு சொல்லப்பட்ட காரணம், 2023ம் ஆண்டு 31ம் இழக்க உபபிரிவு 03 தேர்தல் சட்ட ஏற்பாட்டின் படி, எமது வேட்புமனுவோடு இணைக்கப்பட்ட ஒரு பெண் வேட்பாளரின் உறுதியுரையில், சாத்தியப்பிரமான ஆணையாளர் கையொப்பமிடவில்லை என்ற காரணத்தினால் குறித்த உறுதியுரை நிராகரிக்கப்பட்டமையின் அடிப்படையில் எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.
மேலும் வலி தெற்கு உடுவில் பிரதேச சபைக்கான வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இளம் வேட்பாளர்களை உறுதிப்படுத்தும் வகையில் வழங்கப்பட பிறப்புச்சான்றிதழ் முறையாக உறுதிப்படுத்தப்படவில்லை என காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.
அதே காரணத்துடன் பருத்தித்துறை மற்றும் கரைச்சி பிரதேச சபைக்கான வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், யாழ் மாநகரசபையின் போட்டியிடுகின்ற ஒரு முக்கிய தரப்பு நாம். கடைசியாக இரண்டு ஆண்டுகள் எமது தரப்பு யாழ் மாநகரசபையை ஆட்சி செய்தது. இம்முறையும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தரப்பாக நாம் இருக்கிறோம்.
வெல்வதற்கான வாய்ப்புகளுடனும் நம்பிக்கையுடனும் தாக்கல் செய்யப்பட்ட யாழ் மாநகரசபைகான் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் வேட்பாளரால் சமர்ப்பிக்கப்பட்ட சாத்தியப்பிரமணத்திலே, உறுதிப்படுத்தி ஒரு சாத்தியப்பிரமான ஆணையாளர் கையொப்பமிடவில்லை. எனினும் அவர் தனது பதவி முத்திரையை அதில் பதிந்திருக்கிறார்.
இதே போன்று இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான நல்லூர் பிரதேசசபைக்கான வேட்பு மனுவில் ஒரு வேட்பாளர் நிராகரிக்கப்பட்ட போதும், தமிழரசுக் கட்சிக்கான நல்லூர் பிரதேசசபைக்கான வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் கவலைக்குரிய விடயம், 2023ம் ஆண்டு திருத்தப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் திருத்தச்சட்டத்தில் 31 உப பிரிவு 03 சொல்கிறது ‘ஒருவர் கையொப்பமிடவில்லையெனில் நிராகரிக்கப்பட முடியாது’ என சொல்கிறது.
நிராகரிக்கப்பட முடியாது என சொல்லப்பட்ட சட்டத்தை வைத்து எனது வேட்புமனுவை நிராகரித்துள்ளார்கள். மேலும் குறித்த சட்டத்தில் 31 உப பிரிவு 01 எப்பொழுது வேட்புமனு நிராகரிக்கப்படலாம் என சொல்கிறது.
அதன்படி குறித்த சட்டப்பகுதியின் பி பிரிவில் ‘ மொத்த எண்ணிக்கையை கொண்ட வேட்பாளர்கள் வழங்கப்படாதவிடத்து குறித்த வேட்புமனு நிராகரிக்கப்படலாம்’.
குறித்த சட்டப்பகுதியின் எப் பிரிவில் ‘ சட்டத்தாலே தேவைப்படுத்தப்பட்ட பெண்களையோ இளைஞர்களையோ / யுவதிகளையோ உள்ளடக்காது விட்டால் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்’ என சொல்லப்பட்டிருக்கிறது.
வேட்புமனுப் பத்திரத்தின்படி எமது சமர்ப்பிப்பு சரியாக உள்ளது.
31 உப பிரிவு 03ன் படி சாத்தியக்கடதாசி கையொப்பமிடப்படவில்லை எனில் குறித்த வேட்புமனு நிராகரிக்கப்படக்கூடாது என சொல்லப்பட்ட நிலையிலும் அதே சட்டத்த்தை வைத்து எமது வேட்புமனுவை நிராகரித்துள்ளார்கள். இது இலங்கை சட்டம் ஒழுங்கில் இருக்கக்கூடிய மிகப்பெரும் அபத்தம்.
குறித்த சட்டமீறலை எதிர்த்து நாம் நிச்சயமாக வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.